வாழை பயிர்களுக்கு பயிர் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - கலெக்டர் தகவல்
Thoothukidi collector

வாழை பயிர்களுக்கு பயிர் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மார்ச் 2025 மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(20.03.2025)நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசுகையில், அனைத்து விவசாயிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கும் வகையில் சில ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதிக மனுக்களை அளித்துள்ள விவசாயிகளுக்கு முதலில் பேச வாய்ப்பளிக்கப்படும். அதுபோல ஆற்று பாசன விவசாயிகள், மானாவாரி பகுதி விவசாயிகள் என தனி தனியாக வாய்ப்பு அளிக்கப்படும். அனைத்து விவசாயிகளும் 5 நிமிடங்களுக்குள் பேசி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அவற்றில் சில, 2023- 2024ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் வெங்காயம் மற்றும் பருத்தி பயிர்களுக்கு முழுமையான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். 2024 டிசம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும். உளுந்து பயிர் அறுவடை செய்ய தார்ப்பாய் வழங்க வேண்டும். மேல செக்காரக்குடியில் மக்காசோளம் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மணிமுத்தாறு 3வது ரீச் கால்வாயில் தண்ணீர் கடைமடை குளங்களுக்கு வந்து சேரும் வகையில் திறந்துவிட வேண்டும்.
கோவில்பட்டியில் நடைபெற்ற உரம் கடத்தல் தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். விவசாயத்துக்கு இடையூறாகவும், காட்டுப்பன்றிகளுக்கு மறைவிடமாகவும் உள்ள வேலிக்கருவை மரங்களை அகற்ற வேண்டும். சேரகுளத்தில் வேளாண் வாடகை மையம் அமைக்க வேண்டும். சேரகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு புத்துயிரூட்டி மீண்டும் செயல்பட வைக்க வேண்டும். வாழை பயிர்களுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும்.
தென்னை விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னையில் இருந்து பதநீர் எடுக்க விவசாய உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கருமேணி ஆற்றில் நீர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மோசடி புகாரில் சிக்கியுள்ள குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் உள்ள விவசாயிகளின் சேமிப்பு பணம் மற்றும் நகைகளை விரைவாக திரும்ப வழங்க வேண்டும். தாமிரபரணி ஆற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.
சடையநேரில் கால்வாயில் வெள்ளக்காலங்களில் தண்ணீர் திறக்காமல், வடிந்த பிறகு திறப்பதால் பயனில்லை. வெள்ளக்காலங்களில் தண்ணீர் திறக்க வேண்டும். மணிமுத்தாறு கால்வாயில் கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வருவதில்லை. மாறாக மேலே குளங்களில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக நிரம்பி வீணாக வெளியேறுகிறது. இதனை தடுத்து கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பதிலளித்தார். அவற்றில் சில, வெங்காயம், பருத்தி பயிர்களுக்கான காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இரு பிர்க்கா பகுதிக்கு மட்டும் இன்னும் வரவில்லை. அதுவும் ஓரிரு நாளில் வந்துவிடும். மழை வெள்ளத்தில் பயிர்கள் பாதிப்பு குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தார்பாய்கள் தற்போது இருப்பு இல்லை. புதிதாக வந்ததும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மக்காசோளம் பயிருக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வாய்ப்பு இருந்தால் பரிசீலிக்கப்படும்.
மணிமுத்தாறு பாசனத்தில் கடை மடை குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்மேலாண்மையை முறையாக செய்ய வேண்டும். உரம் கடத்தல் தொடர்பாக காவல் துறை சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. வேலிக் கருவை மரங்களை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாழை பயிர்களுக்கு பயிர் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை விவசாயத்தை மேம்படுத்த குட்டை, நெட்டை ரக தென்னங்கன்றுகளை கூடுதலாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து பதநீர் இறக்க கதர் கிராம தொழில்கள் வாரியம் மூலம் விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
குரும்பூர் கூட்டுறவு வங்கி மோசடி வழக்கை விரைந்து முடித்து விவசாயிகளின் சேமிப்பு பணம் நகைகளை விரைவாக திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணி முழுமையாக நடைபெறும். மணிமுத்தாறு பாசனத்தில் கடை மடை குளங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தண்ணீர் வீணாக வெளியேறுவதை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேஷ், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.