கடலறிப்பு – தூண்டில் வளைவுகள் : தீர்வா? புதிய சிக்கலா? அறிவியல் ஆய்வு அவசியம்
Sea News
கடலறிப்பை தடுப்பதற்கு தூண்டில் வளைவுகள் தீர்வாகுமா? அல்லது அதுவே புதிய சிக்கலை ஏற்படுத்துமா? என்பது குறித்து அறிவியல் ஆய்வு செய்வது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்த துவங்கியுள்ளனர்.
கடலில் உருவாகும் பெரிய அலைகள் மற்றும் கடல் நீரின் இயற்கை இயக்கம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடற்கரை அறிப்பு (Coastal Erosion) அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல கடலோர கிராமங்கள் இந்த கடலறிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகேயுள்ள கடற்கரை பகுதிகளும் அடிக்கடி கடல் அறிப்புக்கு உள்ளாகி வருகிறது. சமீப காலங்களில் அப்பகுதியில் கடற்கரையின் இயல்பான அமைப்பு மாறி, மணல் சேர்ந்து மேடாக உருவாகியுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது.
தூண்டில் வளைவுகள் – அரசின் நடவடிக்கை
மீனவர்கள் மற்றும் கடலோர மக்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஏற்கனவே உவரி, மனப்பாடு, ஆலந்தலை, திருச்செந்தூர், புன்னக்காயல் மற்றும் தூத்துக்குடி இடையே சில இடங்களில் கடல் அலையை கட்டுப்படுத்தும் வகையில் தூண்டில் வளைவுகள் (Groynes / Breakwaters)அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அலை வேகத்தை குறைத்து, கரையை பாதுகாப்பதே அரசின் நோக்கமாக இருக்கிறது. தற்போது கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே உள்ள தோமையார்புரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து, போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய ஐயப்பாடு – ‘ரியாக்ஷன்’ ஏற்படுகிறதா?
இந்நிலையில், தூண்டில் வளைவு அமைக்கப்படும் பகுதியில் கடல் அலைகள் நேரடியாக தாக்காமல் தடுக்கப்பட்டாலும், அதே அலைகள் அடுத்த பகுதியை நோக்கி அதிக வேகத்துடன் தாக்குவதால் அங்கு புதிய கடற்கரை அறிப்பு ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திருச்செந்தூர் பகுதியில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கம், காயல்பட்டினம், புன்னக்காயல், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு படிப்படியாக விரிவடையக்கூடும் என விபரம் அறிந்த சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இது “சங்கிலி விளைவு” (Chain Reaction) போல் செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அறிவியல் பார்வை என்ன?
கடல் நீர் இயற்கையாக ஒரு திசையில் மணலை எடுத்துச் சென்று சேர்க்கும் செயல்முறையை Longshore Drift என்று கடலியல் விஞ்ஞானம் குறிப்பிடுகிறது. ஒரு இடத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படும்போது, அந்த இயற்கை மணல் ஓட்டம் தடைபட்டு, ஒரு பகுதியில் மணல் சேரும் நிலையில், அதற்கு அடுத்த பகுதியில் மணல் குறைந்து கடற்கரை அறிப்பு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கடலியல் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும், கடலுக்கும் நிலத்துக்கும் உள்ள இயற்கை தொடர்பு தான் நிலத்தடி நீர் வளத்தை தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இதனால் பெரிய கட்டுமானங்கள் கடற்கரை இயல்பை மாற்றும்போது, அதன் நீண்டகால விளைவுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கை
இந்த சூழ்நிலையில்,தூண்டில் வளைவுகள் உண்மையில் கடலறிப்பை நிரந்தரமாக கட்டுப்படுத்துகிறதா? அல்லது புதிய பகுதிகளில் அறிப்பை உருவாக்குகிறதா? கடற்கரை மாற்றங்கள் நிலத்தடி நீர் வளத்தை பாதிக்குமா? என்பது குறித்து அரசு அறிவியல் ரீதியான விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், ஆய்வு முடிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக விளக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் விளக்கம் தேவை
அறிவியல் ரீதியாக தூண்டில் வளைவுகள் பாதுகாப்பானவை என்றும், நீண்டகால பாதிப்பு இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டால், மக்கள் நலன் கருதி அவற்றை அமைப்பதில் எந்த எதிர்ப்பும் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசியல் அழுத்தங்களுக்கு இடமளிக்காமல், சுற்றுச்சூழல், கடலியல் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
nadunilai.com