தேர்வு அறையில் ஹிஜாபை நீக்க சொன்ன விவகாரம் ! - மே.வ.அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி
W.B.News
மேற்கு வங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வின்போது, ஹிஜாப் அணிந்து வந்த மாணவியர்களிடம் அதை அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டதாக எழுந்த புகார், தற்போது தேசிய அளவில் மத உரிமை, கல்வி ஒழுங்கு, அரசியல் தலையீடு என பல்வேறு கோணங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
நிகழ்வு பின்னணி
கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற செமஸ்டர் தேர்வின்போது, இரு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு அறைக்கு வந்துள்ளனர். தேர்வு எழுத வந்தவர்கள் உண்மையில் அந்தந்த மாணவியர்களேதானா என்பதை உறுதி செய்யும் நடைமுறையின் அடிப்படையில், தேர்வு அறையில் பணியாற்றிய ஆங்கிலத் துறை பேராசிரியை சஸ்வதி ஹால்டர், ஹிஜாபை அகற்றுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மற்றும் மாநில அரசு தரப்பு
மாணவர்கள் தரப்பில், ஹிஜாப் என்பது மத அடையாளம் மட்டுமல்ல; தனிப்பட்ட உரிமை, இஸ்லாமிய மத உணர்வை புண்படுத்திய பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழியுறுத்தினர். மாநில அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைத்தது. விசாரணை குழு அறிக்கையின்படி பேராசிரியை சஸ்வதி நீண்ட நாட்களுக்கு கட்டாய விடுப்பில் அனுப்பபட்டுள்ளார். இதற்கு பாஜக உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே பேராசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை நிரந்தர தண்டனை அல்ல என்று நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் சமநிலை வாதம்
இந்த விவகாரத்தில் பல்வேறு சமூக ஆர்வலர்கள் சமநிலை கருத்தை முன்வைத்துள்ளனர். அவர்கள் கூறுவதாவது: “எந்த ஒரு நாட்டிலும் சிறுபான்மை சமூகம் பாதுகாப்புடன் வாழ வேண்டும். அதற்கான வாய்ப்புகளை அரசு மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகமும் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது பொதுவான நியாயம். ஆனால் அதே நேரத்தில், அனைவருக்கும் பொதுவான தேர்வு நடைபெறும் போது, தேர்வு நடத்தும் நிர்வாகம் ஒவ்வொரு மாணவரின் அடையாளத்தையும் உறுதி செய்திருக்க வேண்டியது அவசியமான ஒழுங்கு முறையாகும்.”மேலும் அவர்கள், தேர்வு அறையில் இருப்பவர், ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நபர்தானா என்பதை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமை,அந்த நடைமுறைக்கு மதம் தடையாக மாறக் கூடாது, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே என்றும் தெரிவிக்கின்றனர்.
மறைவான சோதனை – ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வா?
சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கூறுவதாவது:“மாணவியர்களின் மரியாதை மற்றும் நலனை கருத்தில் கொண்டு, சற்று மறைவான இடத்தில் வைத்து அடையாள சோதனை செய்திருக்கலாம். அதற்கான பொறுப்பு சோதனை செய்தவர்களுக்கே உரியது.”இந்த சம்பவத்தில், சோதனை செய்தவர் பெண் ஆசிரியை என்பதால் அதில் தவறு இல்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும்,மதக் கட்டுப்பாடுகள் பொதுவான ஒழுங்குமுறைக்கு தடையாக மாறும் நிலை ஏற்படக் கூடாது என்பதே அவர்களின் முக்கிய வாதமாக உள்ளது.
சட்ட நிபுணர்கள் கூறுவதாவது:
அரசியலமைப்பின் பிரிவு 25 மதச் சுதந்திரத்தை வழங்கினாலும், அது பொதுச் சட்டம், ஒழுங்கு, கல்வி நிறுவன விதிமுறைகளுக்கு உட்பட்டதே.முன்னதாக கர்நாடக ஹிஜாப் வழக்கிலும், கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான விதிகளை வகுக்க அதிகாரம் பெற்றவை என நீதிமன்றம் கூறியிருந்தது. அரசியல் பார்வையாளர்கள் இதை, சிறுபான்மை பாதுகாப்பு vs. தேர்வு ஒழுங்கு கல்வி நிர்வாகம் vs. ஓட்டு வங்கி அரசியல் என்ற இரு தளங்களுக்கிடையிலான மோதலாக பார்க்கின்றனர்.
அரசியல் செய்வது சரியா?
இந்த விவகாரத்தில்,“ஆளாளுக்கு பெரும்பான்மை, சிறுபான்மை என்று கூறி அரசியல் செய்வது சரியில்லை. கல்வி தொடர்பான நிர்வாக விவகாரங்கள் அரசியல் மோதலாக மாற்றப்படுவது ஆபத்தான போக்காகும்,”என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
ஹால் டிக்கெட்டில் உள்ள நபர்தான் தேர்வு எழுதுகிறார் என்பதை உறுதி செய்ய ஏற்ற நிரந்தர நடைமுறை என்ன? அந்த நடைமுறை மத உரிமைகளையும், பொதுவான ஒழுங்கையும் சமநிலைப்படுத்துமா? கல்வி விவகாரங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது தவிர்க்கப்படுமா?
nadunilai.com