களத்திற்கே வராதவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் - அமைச்சர் கீதாஜீவன் காட்டம்
DMK News
தூத்துக்குடி, டிச.22
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தமிழக முழுவதும் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற மக்கள்சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகராட்சி 34-வது வார்டு, 42-வது பாகத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர்,“வார்டுக்குட்பட்ட அனைத்து தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் முழுமையாக இடம்பெற வேண்டும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தால், நடைபெற்று வரும் சேர்க்கை பணியின் மூலம் அவர்களை முழுமையாக சேர்க்க வேண்டும். திமுக ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்த வேண்டும். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய, பொதுமக்களை நேரில் சந்தித்து, திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை முழுமையாக எடுத்துச் சொல்ல வேண்டும். திமுக ஆட்சியில், விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டம், விடுபட்ட தகுதியான பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவது, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்படவுள்ள இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்,வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை,பர்னிச்சர் பார்க், கனிமொழி எம்.பி. முன்னெடுப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் ஆகியவை வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் எத்தனை அணிகள் களமிறங்கினாலும், முதன்மையான அணி திமுக தான். இந்தப் பகுதியில் நமது வாக்குகள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த 20 நாட்கள் முழுமையாக களத்தில் இருந்து, வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நடைபெறாத வளர்ச்சிப் பணிகள், திமுக ஆட்சியில் மாநகராட்சி முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளன. களத்திற்கே வராத பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 2026 தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் சுரேஷ், கவுன்சிலர் ராமர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், அவைத்தலைவர் ஆனந்தன்,வட்ட துணைச் செயலாளர்கள் அன்னலட்சுமி, மாரிமுத்து, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார்,வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், தாமரைலிங்கம், ஜெயராமன், மணி மற்றும் பல்வேறு பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
nadunilai.com