அதிமுக–பாஜக கூட்டணியை முறியடிக்க திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் : சி. எஸ். முரளிதரன் கோரிக்கை

Congress News

அதிமுக–பாஜக கூட்டணியை முறியடிக்க திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் : சி. எஸ். முரளிதரன் கோரிக்கை

தமிழகத்தில் அதிமுக–பாஜக கூட்டணியை முழுமையாக முறியடிக்க, திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதே காலத்தின் கட்டாயம் என்று, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு, தூத்துக்குடி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பானை, வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும். இதனை காலம் தாழ்த்தாமல் உடனடியாக உறுதி செய்தால் மட்டுமே, தமிழகத்தில் மீண்டும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார். 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் காங்கிரஸ்–திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை என்.டி.ஏ கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, டி.டி.வி. தினகரனை பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார். வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில், அதிமுக–பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்தியா கூட்டணியில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே வலுவான நட்பு உள்ளது. குறிப்பாக, ராகுல் காந்தி – முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையேயான நம்பிக்கையான நட்புறவு காரணமாக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் மோடி அரசை தமிழக முதல்வர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இதன் காரணமாகவே, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிகளை ஒன்றிய அரசு நிறுத்தி, திமுக ஆட்சியை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

இத்தகைய சூழலிலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நிர்வாகத் திறமையால் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, இன்று மக்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்துள்ளார் என்றும் அவர் பாராட்டினார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், இந்திய நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என்ற கோரிக்கை, இந்தியா கூட்டணியில் இருந்து ஓங்கி ஒலித்தது. அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குரல் முக்கியமானதாக இருந்தது. இதன் காரணமாகவே, இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியையும், இந்தியா கூட்டணியையும் பலவீனப்படுத்த, முதலில் தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது என்றார்.

தமிழகத்தில் எப்படியாவது பாஜக காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு, எடப்பாடி பழனிச்சாமியை முன்னிலைப்படுத்தி, எந்த ரூபத்திலாவது திமுக ஆட்சியை அகற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. இதனை முறியடிக்க வேண்டும் என்றால், திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தமிழகத்தில் உங்களால் நுழைய முடியுமா?” என்று பாஜகவை நோக்கி கேள்வி எழுப்பியதையே, இந்த கூட்டணியின் வலிமை நிரூபிக்கிறது என்றார்.

இந்த கூட்டணி தொடர்ந்தால் மட்டுமே, தமிழகத்தில் பாஜகவை நுழையவிடாமல், பாஜகவின் அரசியலுக்கு முகத்தில் கரியை பூச முடியும். தமிழகத்தில் பாஜகவிற்கு இடமில்லை என்பதை மீண்டும் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார். தமிழக மக்கள் முழுமையாக எதிர்பார்ப்பதும் இதுவே. பாஜக–அதிமுக கூட்டணியை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றால், திமுக–காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான ஆட்சியை உருவாக்கி, மக்களுக்கு மேலும் பல்வேறு திட்டங்களை வழங்கி, 2029ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக தமிழகத்தில் 40க்கு 40 எம்.பி.க்களை வெற்றி பெறச் செய்ய முடியும். அதன்மூலம், மத்தியிலும் மோடி தலைமையிலான அரசை வீழ்த்த முடியும் என்று அவர் கூறினார்.