தூத்துக்குடி தெப்பக்குளம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி
N.P.Jegan
தூத்துக்குடி மாநகரின் வரலாற்றுச் சின்னமான தெப்பக்குளம், அதன் பழமையான கட்டமைப்பு மற்றும் பாரம்பரிய தன்மை மாறாமல், பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் சீரமைக்கப்படும் என்று தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், ஒவ்வொரு புதன்கிழமையிலும் ஒரு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த முடிவின் அடிப்படையில் கிழக்கு மண்டலத்தில் இந்த குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, சொத்து வரி நிர்ணயம் மற்றும் பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, குடிநீர் பயன்பாட்டு கட்டண விகித மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், தொழில் வரி, பாதாள சாக்கடை உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் தொடர்பாக தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக மேயரிடம் வழங்கினர்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்த குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. கிழக்கு மண்டலத்தில் இதுவரை நடைபெற்ற 19 முகாம்களில் 848 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 832 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 மனுக்கள் ஆய்வில் உள்ளன,” என்றார்.
மேலும் அவர் பேசுகையில், “தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறுகிய தெருக்களிலும் பேவர் பிளாக் மற்றும் தார் சாலைகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் வாகனங்களை வி.இ. ரோடு, விவிடி ரோடு உள்ளிட்ட மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்,” என்றார். கிழக்கு மண்டலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய வடிகால்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும், முதல் கட்டமாக எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதியில் உள்ள வடிகால்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் பகுதியில் ஏற்பட்டுள்ள சில பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும், சிவன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெப்பக்குளம் அதன் பாரம்பரியம் பாதிக்கப்படாத வகையில் முழுமையாக சீரமைக்கப்படும் என்றும் மேயர் உறுதியளித்தார்.
மேலும், “அதிமுக ஆட்சிக்காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலை இருந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முத்துநகர் கடற்கரை பூங்கா, மகளிர் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட 53 திட்டங்கள் எதிர்கால தலைமுறையினரின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
கடற்கரை சாலையில் உள்ள படகு குழாம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெல் ஹோட்டல் முதல் கடற்கரை சாலை வரை 8 கிலோமீட்டர் நீளத்தில் நடைபயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது,” என்றார்.
பொதுமக்கள் சாலைகளிலும், குறிப்பாக பக்கிள் ஓடை ஓரங்களிலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். விடுபட்ட சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார். முகாமின் இறுதியில், ஒருவருக்கு தீர்வு காணப்பட்டதற்கான சான்றிதழை மேயர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர்கள் முனீர் அகமது, அனுசவுந்தர்யா, அபிலாவண்யா, நித்யகல்யாணி, ஹரிகிருஷ்ணன், நகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், தொழில்நுட்ப உதவியாளர்கள் சரன்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, ரெக்ஸ்லின், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், மகேஸ்வரி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்ற அக்கறை அரசுத் துறையிலும், கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை காண முடிந்தது.
nadunilai.com