தூத்துக்குடி – சென்னை வந்தே பாரத் ரயில் சேவை - அமைச்சர் எல்.முருகனிடம் சித்ராங்கதன் கோரிக்கை
BJP News
தூத்துக்குடி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் புதிய ரயில் சேவைகள், ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் பிட் லைன் வசதி அமைத்தல், திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்குதல், சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டித்தல் மற்றும் தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை விரைவில் தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகனிடம் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது : மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருவதாகவும், விண்வெளி பூங்கா, கேந்திரிய வித்யாலயா பள்ளி, கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட திட்டங்கள் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய உந்துதலை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பராமரிப்புப் பணிகளுக்காக அவற்றை திருநெல்வேலிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை காரணமாக காலதாமதம் ஏற்படுகிறது. ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் ஏற்கனவே போதிய தண்டவாள வசதி இருப்பதால் அங்கு பிட் லைன் அமைக்கப்பட்டால் ரயில்களை அங்கேயே பராமரிக்க முடிவதுடன், திருச்செந்தூருக்கு கூடுதல் ரயில் சேவைகளையும் இயக்குவதற்கு வழிவகுக்கும்.
ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மேலும், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களின் பயணத் தேவையையும் கருத்தில் கொண்டு, சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி புதிய ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது திருநெல்வேலி - மும்பை வரை இயக்கப்படும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடி–சென்னை வந்தே பாரத் ரயில் சேவையை உடனடியாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் வளர்ச்சி, வணிக முன்னேற்றம், சுற்றுலா மேம்பாடு மற்றும் பொதுமக்களின் விரைவான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, இந்த கோரிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் சிவராமன், திருச்செந்தூர் மண்டல் தலைவர் செல்வ குமரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
nadunilai.com