புதுக்கோட்டையில் தவறான வழிகாட்டியால் தடுமாறும் வாகன ஓட்டிகள்.!

NH NEWS

புதுக்கோட்டையில் தவறான வழிகாட்டியால் தடுமாறும் வாகன ஓட்டிகள்.!

வைத்த பிறகு வழிகாட்டி போர்டு தவறாக திரும்பி இருந்தால் பரவாயில்லை, எதோ காரணத்திற்காக திரும்பியிருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் வைத்ததே தவறாக என்றால் எப்படி இருக்கிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம்?. 

திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையில் மேம்பாலம் இருக்கிறது. நெல்லை வழித்தடத்தில் இருந்து வரும் வாகனங்கள் புதுக்கோட்டை ஊருக்குள் செல்ல வேண்டுமென்றால் மேம்பாலத்திற்கு முன்பாக இடதுபுறமாக திரும்பி பாலத்தின் அடிப்பகுதி வழியாக புதுக்கோட்டை ஊருக்குள் செல்ல வேண்டும். 

இதனை வெளியூரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் பாலத்திற்கு முன்பாக ரோட்டின் நடுப்பகுதியில் வழிகாட்டி போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டில் புதுக்கோட்டை என்கிற பெயருக்கு அருகில் அம்புக்குறி இருக்கிறது. அந்த அம்புக்குறியானது மேம்பாலத்தை நோக்கி அதாவது தூத்துக்குடி நோக்கி வழிகாட்டுவதாக இருக்கிறது. இடது புறமாக அம்பு குறி காட்டுவதற்கு பதிலாக நேராக பாலம் நோக்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது ஏறி, இறங்கும் போது புதுக்கோட்டை ஊருக்குள் செல்ல வாய்ப்பில்லை. அப்படியே தட்டபாறை விலக்கு வரை சென்று, அங்கிருந்து திரும்பிதான் புதுக்கோட்டை ஊருக்குள் வர வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. 

அம்புக்குறி தவறாக இருக்கிறது என்பதை கூட கவனிக்காமல் அதிகாரிகள், ஊழியர்கள் அப்படி தவறாக வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இதனை கவனித்து குறிப்பிட்ட அந்த வழிகாட்டி போர்டில் அம்புக்குறி இடதுபுறமாக திரும்பும்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.