உள்ளாட்சி தேர்தல் முறைகேடு வழக்கு : நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி நீக்கம்

Nazareth news

உள்ளாட்சி தேர்தல் முறைகேடு வழக்கு : நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி நீக்கம்

நாசரேத், செப்.2- உள்ளாட்சி தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி நாலுமாவடி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேஷை பதவி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த கடந்த 2019 டிச.27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. ஆழ்வார்திருநகரி ஒன்றியத்துக்குட்பட்ட குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி பஞ்சாயத்து தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்ட நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்(48) வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ராஜேஷ் பஞ்சாயத்து துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் நாலுமாவடியை சேர்ந்த அழகேசன் என்பவர், பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேசுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 2021 டிசம்பரில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனு சத்திய பிரமாண பத்திரத்தில் கொலை வழக்கில் அவர் அனுபவித்த 7 ஆண்டு சிறை தண்டனையை மறைத்து 2 ஆண்டு சிறை தண்டனை என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தேர்தலில் முறைகேடாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜேஷ் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலருக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் ராஜேசின் வார்டு உறுப்பினர் பதவியையும், துணைத்தலைவர் பதவியையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. நாலுமாவடி பஞ்சாயத்து, துணைத்தலைவர் ராஜேஷ் கோர்ட் உத்தரவின் நடவடிக்கையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாலுமாவடி பஞ்சாயத்து, துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாலுமாவடி தெற்கு தெருவை சேர்ந்த சுதாகரன் மனைவி அன்னலெட்சுமி(43). இவர் கடந்த ஆக.31ம் தேதி ஆட்டுக்கு இலை பறிப்பதற்காக உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஞ்சாயத்து, துணைத்தலைவராக இருந்த ராஜேஷ் வீட்டிலிருந்து வெளியே வீசப்பட்ட குப்பையும், மதுபாட்டில்களும் அன்னலெட்சுமி மீது விழுந்துள்ளது. இதனை தட்டிக்கேட்ட அவருக்கு, ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்ஆப்பில் அன்னலெட்சுமியை அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.