தூத்துக்குடி : நடத்துனர் இல்லாமல் பயணிகளோடு கொட்டும் மழையில் காத்து நின்ற 6 அரசு பேருந்துகள்.!
TNSTC NEWS
குறைவான பணியாளர்களை கொண்டு நிறைவான பணியை எதிர்பார்க்க முடியாது. அப்படித்தான் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சில பிரிவு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்று நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ஓய்வு பெற்று செல்வோர் இடத்தில் புதிய ஆட்கள் நியமித்தல் அவ்வளவாக நடைபெறவில்லை. அதனால் இயக்கப்பட்ட பல பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இருக்கும் பஸ்களை இயக்குவதற்கே ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் பிரச்னை பொதுமக்களை பாதிக்காத வகையில் அதிகாரிகளும், பணியாளர்களும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதாவது அனைவருமே அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இருக்கும் நபர்களை வைத்து சமாளித்து வருகின்றனர்.
அந்த வகையில் குறைவான நடத்துனர்களை கொண்டு நெல்லை - தூத்துக்குடி இடையே இடைநில்லா பேருந்துகளை இயக்குகின்றனர். அதாவது பேருந்து நிலையத்தில் ஆட்களை ஏற்றி செல்லும் பேருந்து, கலெக்டர் அலுவலகம் முன்புள்ள பஸ் நிறுத்தப்பட்டு அதில் உள்ள நடத்துனர் அதில் இறங்கி கொள்வார். பஸ் கிளம்பிவிடும். அதுக்குள்ளாகவே அவர் டிக்கெட் போட்டுவிட வேண்டும். அந்த இடத்தில் இறங்கும் நடத்துனர் சாலையை கடந்து சென்று அந்த வழியாக வரும் பஸ்ஸில் ஏறி மீண்டும் பஸ்ஸ்டாண்ட் செல்ல வேண்டும். அங்கு தயாராக நிற்கும் மற்றொரு பேருந்தில் ஏறி மீண்டும் அவர் அதுவரை வந்து செல்ல வேண்டும். இப்படியொரு சிஸ்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் இன்று(02.09.2023)மதியம் மழையோடு மழையாக தூத்துக்குடி பஸ்ஸ்டாண்டுக்கு வந்த அரசு பஸ்களில் பயணிகள் ஏறி அமர்ந்தனர். ஆனால் நடத்துனர்கள் வரவில்லை. 6 பேருந்துகளின் ஓட்டுனர்களும், பயணிகளும் நடத்துனர் வருகைக்காக காத்திருந்தனர். பலத்த மழை பெய்ததால் எதிர் திசையில் இருந்து வந்த பஸ்களில் அவர்கள் ஏறி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பயணிகள் வெகுநேரம் பஸ்களில் காத்துகிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு நின்ற போக்குவரத்து துறை சார்ந்தவர்களிடம் பயணிகள் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள், நடத்துனர்களை வரவழைத்து நின்ற பேருந்துகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுத்தனர்.
ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறைதான் இதுபோன்ற பிரச்னைக்கெல்லாம் காரணம் என்கிறபோது விரைவில் பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.