தூத்துக்குடி அருகே கடன் தகராறு குறித்த ஆடியோ பரவல் : வாலிபர் வெட்டி கொலை, பஞ்.துணை தலைவர் உட்பட 3 பேர் கைது

Murder

தூத்துக்குடி அருகே கடன் தகராறு குறித்த ஆடியோ பரவல் : வாலிபர் வெட்டி கொலை, பஞ்.துணை தலைவர் உட்பட 3 பேர் கைது

தூத்துக்குடி அருகே கோவங்காடு கிராமத்தில் கடன் தகராறு குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் பஞ்சாயத்து துணை தலைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட தெற்கு கோவங்காடு ஊரை சேர்ந்தவர் மாசானமுத்து மகன் ராஜதுரை(28).  இவர் கடந்த 16 மாதங்களுக்கு முன்பு வடக்கு கோவங்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் மந்திரம் என்ற சின்னதுரை (42)என்பவரிடம் ரூ.1லட்சம் கடனாக வட்டிக்கு வாங்கியிருக்கிறார். மந்திரம் என்ற சின்னத்துரை கோவங்காடு பஞ்சாயத்து துணைத்தலைவராக உள்ளார். கடன் வாங்கிய ராஜதுரை வாங்கிய தொகைக்கு 8 மாதங்களாக வட்டி கட்டி வந்திருக்கிறார். பின்னர் வட்டி கட்டவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. மந்திரம் என்ற சின்னதுரை கடன் பணத்தை தொடர்ந்து ராஜதுரையிடம் திருப்பி கேட்டுவந்திருக்கிறார். திருப்பி கொடுக்க முடியாத நிலையில் இது குறித்து காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இதுக்கிடையில் ராஜதுரையும்,சின்னத்துரையும் செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியிருக்கிறது. இந்தநிலையில் ராஜதுரையின் உறவினரான பால்துரை(37) இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார். அவரிடம் மந்திரம் பணத்தை கேட்டுள்ளார். வார்த்தை முற்றிய நிலையில் பணத்தை திருப்பி தர முடியாது என்று பால்துரை கூறியதாக தெரிகிறது. 

இதை தோடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெற்கு கோவங்காடு ரோட்டில் நின்று கொண்டிருந்த பால்துரையை மந்திரம் என்ற சின்னத்துரை மற்றும் தெற்கு கோவங்காடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ்(24), மாசிலாமணி மகன் கதிர்வேல் (40) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் மற்றும் ஏரல் இன்ஸ்பெக்டர் (பொ) ஜானகி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பால்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பஞ்சாயத்து துணை தலைவர் மந்திரம் என்ற சின்னத்துரை, ராஜேஷ் மற்றும் கதிர்வேல் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.