நெல்லை - திருச்செந்தூர் இடையே நள்ளிரவில் அடிக்கடி நடக்கும் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவம்.!

Bus news

நெல்லை - திருச்செந்தூர் இடையே நள்ளிரவில் அடிக்கடி நடக்கும் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவம்.!

நெல்லை - திருச்செந்தூர் இடையே அடிக்கடி அரசு பஸ் கண்ணாடி உடைக்கும் சம்பவங்கள் நடக்கிறது. அதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பஸ் பயணிகள் வேண்டுகோள்விடுகின்றனர்.   

மக்கள் வளமாகவும், நலமாகவும் வாழ்வதற்கு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையே போதிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும். எப்போது வேண்டுமென்றாலும் பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்யலாம் என்கிற நிலை வரும் போது எந்த ஒரு தொழிலும் தங்குதடையின்றி லாபத்தோடு நடைபெறும். அதாவது போக்குவரத்து எளிதாக்கம் என்பது வளர்ச்சி இலக்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு, பகல் என்று எப்போதும் பஸ் கிடைக்கும் என்கிற வாய்ப்பு இருப்பதால்தான் சுற்றி இருக்கும் மாவட்ட மக்கள் மதுரையை நோக்கி எப்போது வேண்டுமானாலும் கிளம்பி வருகிறார்கள். அது மக்களுக்கு செளகரியத்தை கொடுக்கிறது. அதுபோல் மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு பேருந்து வசதி இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் மதுரைக்கு வந்துவிடும் மக்கள், திருச்செந்தூரை நம்பி அங்கிருந்து கிளம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதுபோல் நாகர்கோவிலுக்கும், இடையில் நெல்லைக்கும் கேட்காமலே கிடைப்பதுபோல் பஸ் வசதிகள் இருக்கின்றன. அந்த வகையில் திருநெல்வேலியில் இருந்தும் திருச்செந்தூருக்கு பகல் மட்டுமில்லாமல் இரவு முழுவதும் பஸ்யை இயக்கலாம். இதெல்லாம் மக்களிடையே  எழுச்சியை ஏற்படுத்த கூடியதாகும். முன்பு அதுபோல் இருந்த நிலைமை கொரோனா பிரச்னைக்கு பிறகு மாறிவிட்டது. மக்களும் சீக்கிரமாக முடங்கும் சிந்தனைக்கு வந்துவிடுகின்றனர். அவர்களை பார்த்து போக்குவரத்து நிறுவனங்களும் முடங்கியுள்ளன. அதாவது இரவில் சீக்கிரமே போக்குவரத்து சேவையை நிறுத்திக் கொள்ளும் பகுதி ஏராளம் இருக்கிறது. அப்படி இருப்பதை பஸ் போக்குவரத்துதான் மாற்ற முடியும். இரவில் எப்பவேண்டுமானாலும் பஸ் கிடைக்கும் என்கிற நிலை இருந்தால், மதுரை - தூத்துக்குடி, மதுரை - திருநெல்வேலி, மதுரை - நாகர்கோவில், மதுரை - திருச்செந்தூர் மட்டுமில்லாமல், தூத்துக்குடி - திருநெல்வேலி, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையிலும் இரவு முழுவதும் பஸ்களை இயக்கும் நிலை வரவேண்டும். அதுதான் முழுமையான சுதந்திரம் பெற்றதற்கான அடையாளமாகும்.   

இந்தநிலையில் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையிலான சாலையில் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட சில பகுதிகளில் நள்ளிரவு பேருந்துகளை சிலர் வேணுமென்றே கல் எறிந்து தாக்குகிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது. போதையில் கல் எறிந்துவிட்டனர் என்றோ, வேறு எதாவது காரணம் சொல்லியோ அந்த பிரச்னை முடித்து வைக்கப்படுகிறது. அவ்வாறு கல் எறியும் சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு எந்தமாதிரி தண்டணை வழங்கப்பட்டது என்கிற செய்தியை பார்க்க முடிவதில்லை. அப்படியான செய்தி வெளியில் வந்திருந்தால் தொடர்ந்து கல் எறியும் சம்பவம் நடந்திருக்காது. 

நேற்று முன் தினம்(14.10.2024) திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசு பஸ், பொன்னங்குறிச்சிக்கு நள்ளிரவு 12:30 மணியளவிற்கு வந்திருக்கிறது. அங்கு மறைவில் நின்று மர்ம நபர்கள் சிலர் அந்த பஸ் மீது கற்களை வீசி தாக்கியிருக்கின்றனர். இதில் பேருந்தில் கண்ணாடி உடைந்து நொறுங்கி கீழே விழுந்தது. அப்போது சுமார் 20 பயணிகள் அந்த பேருந்தில் இருந்திருக்கின்றனர். நல்லவேளை அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லையாம். 

இந்த தகவல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு சொல்லபட்டது.  உடனே அவர் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து அந்த பயணிகளை ஏற்றி செல்ல மற்றொரு அரசு பேருந்தை பொன்னக்குறிச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த பஸ்ஸில் பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டு, அந்த பஸ் கிளம்பியதும் அந்த பஸ் மீதும் மர்மநபர்கள் கற்களை வீசியுள்ளனர். இதனால் அந்த பஸ் கண்ணாடியும் உடைந்தது. பயணிகள் மிகுந்த அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் பத்மநாபன்பிள்ளை, சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். சாத்தான்குளம் கீழத் தெருவை சேர்ந்த அரசு பஸ் டிரைவர்  முருகேசன் (வயது 54), மற்றொரு அரசு பேருந்து நடத்துனரும், நல்லூரை சேர்ந்த வருமான மத்திஸ்ராஜா (54) ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இப்படியான சம்பவங்கள் அப்பகுதியில் அடிக்கடி நடக்கிறது. இதனை முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சாலையில் இரவு நேர பஸ் இயக்குவது குறைந்து, போக்குவரத்து முடங்கிவிடும். போக்குவரத்து முடங்கினால் சகலமும் முடங்கி போகும். எனவே தற்போது இரண்டு பஸ்கள் மீது கல் எறிந்தவர்களை போலீசார் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு கடும்தண்டணை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது நள்ளிரவில் நடுரோட்டில் இரண்டு பஸ்களுக்கும் நடுவே பரிதவித்த பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுக்கிடையே மது போதையில் பஸ் மீது கல்வீசி தாக்கியதாக பொன்னங்குறிச்சியை முத்துகுமார் (23), சிவநாதபெருமாள் (29) என  இரண்டு பேரை போலீசார் பிடித்து கைது. செய்துள்ளனராம். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்?