உழைப்பவர்களுக்கு தான் பதவி..!அதுதான் அதிமுக..!! - கருப்பசாமிபாண்டியன் அதிரடி
A.D.M.K
குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி கொடுப்பதில்லை, ஆனால் உழைப்பவர்களுக்கு தான் பதவி கொடுக்கும் கட்சி என்றால் அது அதிமுக மட்டும் தான் என்று மாநில அமைப்புச்செயலாளர் கருப்பசாமிபாண்டியன் ஆவேசமாக பேசினார்.
தூத்துக்குடி வடக்குமாவட்ட அதிமுகவிற்குட்பட்ட கருங்குளம் வடக்கு&தெற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் செய்துங்கநல்லூரில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு, கருங்குளம் ஒன்றிய செயலாளர்கள் யூனியன் துணை சேர்மனான லட்சுமணப்பெருமாள்(வடக்கு), பரமசிவன்(தெற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., மோகன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் செங்கான், தெற்குமாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைப்பாண்டியன், மருத்துவ அணி செயலாளர் கோசல்ராம், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் முருகையாபாண்டியன், சிறுபான்மை பிரிவு முஸ்தபா, எம்.ஜி.ஆர்.இளைஞரணி சங்கர், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள், இளைஞர் பாசறை கவியரசன், ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ஐய்யப்பன் வரவேற்றார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கடம்பூர்ராஜூ எம்.எல்.ஏ.(வடக்கு), எஸ்.பி.சண்முகநாதன்(தெற்கு) ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிப்பணிகள், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில், அதிமுகவின் மாநில அமைப்புச்செயலாளர் நெல்லை கருப்பசாமிபாண்டியன் உள்ளாட்சி தேர்தல் பணிக்கான பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுக இயக்கமானது மக்களுக்கான இயக்கமாகும். மறைந்த பொதுச்செயலாளர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழிகாட்டுதல்படி அதிமுக இன்றும் மக்களுக்கான கட்சியாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த திமுகவோ கொள்கை என்பதே இல்லாமல் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கட்சியாக இருந்து வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுகவை பொறுத்தவரை கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நிச்சயமாக பதவி கிடைக்கும். ஆனால், திமுகவில் குடும்ப உறுப்பினர்களுக்கும், அந்த குடும்பத்தின் வாரிசுகளுக்கும் மட்டும் தான் பதவிகள் கிடைக்கிறது. கருணாநிதி முதல்வராக இருந்தார், அதனால் ஸ்டாலின் துணை முதல்வர் ஆனார் அன்று. இதுபோல இன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார், அவரது மகன் துணை முதல்வராகி விட்டார்.
இன்னும் சில நாட்கள் போனால் ஸ்டாலினின் பேரன் மாநில இளைஞரணி செயலாளர் ஆகி விடுவார். இப்படியாகத்தான் திமுகவில் பதவிகள் வழங்கப்படுகிறது. இதனால் தான் அந்த கட்சி அன்று முதல் இன்று வரை என எப்போதுமே குடும்ப கட்சியாகவே இருந்து வருகிறது. மகளிருக்கு இலவச பஸ், சிலிண்டருக்கு ரூ.100, மாதம் ரூ.1000, நீட் தேர்வு ரத்து என என்னஎன்ன பொய்களை எல்லாம் சொல்ல முடியுமோ அதெல்லாம் சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டனர். ஆனால், இப்போ அந்த திராவிட மாடல் திமுக ஆட்சியில், மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, பால், பஸ் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு என மக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
சனாதானத்தை ஒழிப்போம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகன் மேடையில் முழங்கி வருகிறார். ஆனால், அந்த மகனின் அம்மா துர்காஸ்டாலின் கோயில் கோயிலாக போய் வழிபட்டு வருகிறார். அதை செய்வோம், இதை செய்வோம் என்று தேர்தலில் பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவை மக்கள் விரட்டி விட்டு, வரும் 2026ம் ஆண்டு எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியை அமைப்பது நிச்சயமாகும்.எனவே, அதிமுகவினர் ஒவ்வொரும் கட்சியின் வளர்ச்சிக்காக முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கவேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.
இந்த கூட்டத்தில், மாவட்டம், கிளை, ஒன்றியம், நகரம் என அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். மதியம் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுடச்சுட சூடான மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.