வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்ற போது தஞ்சாவூரில் கார் விபத்து - தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

accident

வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்ற போது தஞ்சாவூரில் கார் விபத்து - தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

தூத்துக்குடி 3வது மைல் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ்(60), ஞானம்மாள்(60),ராணி(40) உள்பட 11 பேர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.  அதன்படி அவர்கள் தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த சின்னப்பாண்டி(35)என்பவரது காரில் நேற்று இரவு கிளம்பினர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் அவர்களின் கார் தாஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் உள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பாக்கியராஜ்(60),ஞானம்மாள்(60),ராணி(40),சின்னப்பாண்டி ஆகியோர் 
 உயிரிழந்தனர். அந்த காரில் பயணம் செய்த மேலும் 7 பேர்களுக்கு தஞ்சாவூர் மருவத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டார். தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அப்போது தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தன.

இதுக்கிடையே சிகிச்சை பெற்று வந்த கண்ணகி என்பவரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை ஐந்து ஆனது.