கலைஞர் நினைவு இல்ல திட்ட பயனாளிகள் தேர்வில் தகராறு - தூத்துக்குடி அருகே மல்லுகட்டும் கிராம மக்கள்
Complaint
வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. கடந்த பிப்.19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் என்கிற இந்த தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி.கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இ்த்திட்டத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும். இந்த குழு அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதிகள் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தகுதியானவர்கள் பட்டியலில் விடுபட்டிருந்தால் அவர்களே சேர்க்க வேண்டும். விடுபட்டவர்கள் பட்டியலுக்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அதன்பின், பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்போது பயனாளிகளை சேர்ப்பதில் முன்னுரிமை யாருக்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது. பயனாளிகள் பட்டியலில் இருந்து முதல் இரண்டு பேரின் பெயரை அதிகாரிகள் தேர்ந்ததெடுத்திருப்பதே இப்போது பிரச்னையாகி கிடக்கிறது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் கடந்த ஜூன் 30ம் தேதி நடத்தப்பட்ட கிராமசபை கூட்டத்தில் கலைஞர் நினைவு இல்ல திட்ட பயனாளிகள் 13 பேர் கொண்ட பட்டியல் தயாராகியிருக்கிறது. அதில் தனசேகரன், சித்திரைச்செல்வன் ஆகிய இருவருக்கு மட்டும் தற்போது அரசு தரப்பில் இருந்து வீடு கட்டும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக ஆர்வலர் ஜெபஸ்டின் மற்றும் ஊராட்சி உபதலைவர் வார்டு உறுப்பினர்கள் சிலர் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர், தமிழக முதல்வர் மற்றும் சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு மனுக்களை அனுப்பி வருகின்றனர்.
அந்த மனுவில், சேர்வைகாரன்மடம் ஊராட்சியை சேர்ந்த பயனாளிகள் பட்டியலில் மாற்றுத்திறனாளி பெண் பியூலா மற்றும் தங்கராஜ் உள்பட பயனாளிகள் பலர் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூட முன்னுரிமை கொடுக்காமல், பட்டியலில் உள்ள குறிப்பிட்டு இரண்டு பேருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டிருப்பது விதி மீறல் ஆகும். அதில் தனசேகராவது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர். ஆனால் சித்திரைசெல்வனோ கலைஞர் நினைவு இல்ல ஆணையை மீறி பட்டியலில் முறைகேடாக இணைக்கப்பட்டுள்ளார். இவர் குடிசை வீட்டில் வசிக்கவேயில்லை. கடந்த ஜனவரி 24ம் தேதிதான் தங்கராஜ் என்பவரிடம் காலி வீட்டு மனை வாங்கியுள்ளார். அவர் குடிசைவீட்டில் இருந்ததாக ஆதாரம் இல்லை. இவரது மனைவி மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அதனால் கலைஞர் நினைவு இல்ல திட்ட ஆணையை மீறி முறைகேடாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது. பல வருடமாக ஊராட்சியில் வீட்டுக்காக மனு அளித்த மற்ற பயனாளிகளின் உரிமைகளை இது பாதிக்கும்.
எனவே முறைகேடாக பெயர் சேர்த்த நபர்கள் மீது ஆய்வு செய்து துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கும், மேலும் பட்டியலில் உள்ள மற்ற பயனாளிகளுக்கும் வீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.