தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயிலை தினசரி ரயிலாக்க வேண்டும் - பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
Train news
தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி-சென்னை இடையே பகல்நேர ஜனசதாப்தி ரெயிலை இயக்க வேண்டும் எனவும் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நெல்லை ரெயில்வே கோட்டம் சில ஆண்டுகளில் உருவாகும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கொரோனா காலத்துக்கு முன்பு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல்நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்பட்டது. சுமார் 4 ஆண்டுகளாக ரெயில் இயக்கப்படாமல் உள்ளது. அதே போன்று தூத்துக்குடி-சென்னை இடையே ஜனசதாப்தி ரெயில் இயக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த ரெயில் சாதாரண கட்டணத்துடன் பகல் நேரத்தில் சென்னைக்கு பயணிக்க தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உபயோகமாக இருக்கும். ஆகையால் தூத்துக்குடி மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தூத்துக்குடி-சென்னை இடையேயான பகல்நேர ஜனசதாப்தி ரெயிலை இயக்க வேண்டும்.
பாலக்காடு-தூத்துக்குடி பாலருவி விரைவு ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி பெட்டியும், ஒரு இரண்டு அடுக்கு ஏ.சி பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியும் விரைவாக இணைக்க வேண்டும். தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாரம் இருமுறை ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.