“ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு” – திமுக அரசை சாடும் நயினார் நாகேந்திரன்
Bjp news
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதே மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது திமுக அரசின் மதநல்லிணக்கக் கொள்கையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கையில், “ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான் அறிவாலய அரசின் மதநல்லிணக்கமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில், திருப்பரங்குன்றம் மலையின் மேல் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது, திமுக அரசின் இந்துமத வெறுப்பை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இது வெறும் இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டுமல்ல, தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளையும் திட்டமிட்டு பறிப்பதற்குச் சமம் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “மத்திய பாதுகாப்புப் படையினருடன் சிலர் மட்டுமே மலைக்கு சென்று தீபம் ஏற்றினால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மிகைப்படுத்தி, நீதிமன்ற உத்தரவையும் மீறி தடை விதித்த திமுக அரசின் ஏவல்துறை, நேற்று இரவோடு இரவாக கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்காகக் கொடியேற்றுவதற்கு மட்டும் எப்படி பாதுகாப்பு வழங்கியது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓட்டு வங்கிக்காக திமுக தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில் அரசு அதிகாரிகளும் பங்குதாரர்களாக மாறிவிட்டார்களா என்றும் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். இஸ்லாமியர்கள் தங்கள் விழாக்களை கொண்டாடுவதில் இந்துக்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றும், அதேபோல் இந்துக்கள் திருப்பரங்குன்ற மலைமீது தீபம் ஏற்றுவதால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அமைதியாக நடைபெற வேண்டிய மத விழாக்களில் திமுக அரசு தேவையில்லாமல் தலையிட்டு, திருவிழாவில் கைகலப்பு ஏற்பட்டால் திருடனுக்குக் கொண்டாட்டம் என்பதுபோல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இரு சமூகங்களிடையே மதக்கலவரம் உருவாக வேண்டும், அதை வைத்து மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தீய எண்ணமா?” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை, இந்து மற்றும் இஸ்லாமிய இரு சமூகங்களுக்கும் முக்கியமான வழிபாட்டு தலமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபம், சந்தனக்கூடு விழா உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், சமீப காலங்களில் சட்டம்–ஒழுங்கு காரணங்களை முன்வைத்து அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால், வழிபாட்டு உரிமை தொடர்பான விவகாரம் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்றும், மதநல்லிணக்கம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமுதாயத்தின் வழிபாட்டு உரிமைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் குற்றம் சாட்டி வருகின்றன.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் இரு சமூகங்களிடையே அமைதியை பேணுவதற்கான முயற்சிகள் முக்கியமாக கவனிக்கப்பட உள்ளன
nadunilai.com