ககன்யான் திட்டம் ஒரு சிறப்பு பார்வை - Dr. K. சுதா கல்வியாளர்

Dr. K. சுதா

ககன்யான் திட்டம் ஒரு சிறப்பு பார்வை - Dr. K. சுதா கல்வியாளர்

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பும் வீரர்களை கடலிலிருந்து மீட்கும் குழுவில் முதல் குழுவினர் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிலையத்தில் தங்களது முதற்கட்டப் பயிற்சியை முடித்தனர். அதிநவீன வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் கடற்படை கமாண்டோக்கள் அடங்கிய குழு பல்வேறு கடற்பகுதியில் மீட்புப் பயிற்சியை மேற்கொண்டது. இரண்டு வாரங்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில், விண்கல கேப்சூலின் செயல்பாடு, மருத்துவ உதவி தேவைப்படும் போது செய்ய வேண்டியவை மற்றும் பல்வேறு விண்கலங்கள், அவற்றின் மீட்பு உபகரணங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய கடற்படை மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய வழிமுறைகள் இந்த பயிற்சியில் சரிபார்க்கப்பட்டது. பயிற்சியின் இறுதி நாளில், இஸ்ரோவின் டாக்டர் மோகன்  பயிற்சிக் குழுவினருடன் உரையாடினார். வரும் மாதங்களில் இஸ்ரோவால் திட்டமிடப்பட்ட ககன்யான் சோதனையின்போது விண்வெளி வீரர்களை மீட்டெடுப்பதில் இந்த பயிற்சி பெற்ற வீரர்கள் ஈடுபடுவர் என்று ஜூலை 2, 2023 அன்று தகவல் வந்தது. 

 சந்திரயானுக்கு பிறகு இஸ்ரோ செய்யப்போகும் அடுத்த உலக சாதனை:
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம்.

▪️விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வீரர் என்றால் அவர் பெயர் ராகேஷ் சர்மா தான். 1984 ஆம் ஆண்டு ரஷ்யா நடத்திய ஒரு மிஷனில் இவர் விண்வெளிக்கு சென்றுள்ளார். அதன் பின்பு இந்தியா சார்ந்த பலர் இந்தியா அல்லாமல் மற்ற விண்வெளி ஆய்வு மையங்களின் திட்டங்கள் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளனர்.

▪️இஸ்ரோ விண்வெளிக்கு இதுவரை மனிதர்களை அனுப்பியதில்லை. ஆனால்  சந்திராயன் 3 சாதனையால் பலர் இஸ்ரோவை திரும்பிப் பார்க்கின்றனர்.

▪️இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை தயார் செய்து விட்டது. அப்பொழுதே பிரதமர் மோடி ககன்யான் திட்டம் குறித்து அறிவித்தார்.

▪️ககன்யான் என்றால் சமஸ்கிருதத்தில் ஸ்பேஸ் கிராஃப்ட் என பொருள். இந்த திட்டத்தின்படி மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.இந்த திட்டத்தை 2021 ஆம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.

▪️ஆனால் 2020 ஆம் ஆண்டில் வந்த கொரோனா காரணமாக பல்வேறு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. 2026ம் ஆண்டு விண்வெளிக்கு இஸ்ரோ மனிதர்களை அனுப்பும் என தெரிகிறது.

▪️ககன்யான் திட்டம் என்பது மூன்று நாள் திட்டமாகும். இதன்படி மூன்று விண்வெளி வீரர்களை ராக்கெட்டில் ஏற்றி அவர்களை விண்ணுக்கு அனுப்பி பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் அவர்களை நிறுத்தி மூன்று நாட்கள் அவர்கள் அங்கு ஆய்வு செய்த பின்ப அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்தத் திட்டத்தின் செயலாகும்.

▪️இந்தத் திட்டத்திற்கு பத்திரமாக விண்வெளி வீரர்கள் பூமிக்கு வர அவர்கள் கடலில் தரை இறங்குவார்கள் அவர்களை மீட்க இந்திய கடற்படை தயாராக இருக்கும்படி திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக தற்போது உள்ள ராக்கெட்டில் கூடுதலாக க்ரூ எஸ்கேப் சிஸ்டம் என்ற புதிய கருவியை செட் செய்து அதில் எந்த நேரம் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், அதன் மூலம் விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமியில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

▪️விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முன்பு மூன்று முறை ஒத்திகை பார்க்க இஸ்ட்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு முறை எந்த பேலோடுகளும் இல்லாமலும் இரண்டு முறை பேலோடுகளுடன் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பி சோதனை செய்த பின்பு அதன் மூலம் நல்ல முடிவுகள் கிடைத்தால் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪️இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோ தற்போது சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்பிய அதே எல்விஎம் 3 ராக்கெட்டை தான் பயன்படுத்த போகிறது. இந்தத் திட்டத்திற்காக அரசு ரூபாய் 9,023 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்காக விண்வெளி வீரர்களை தயார் செய்யும் பல்வேறு ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.

▪️இஸ்ரோ விண்வெளி வீரர்களை தயார் செய்வதற்காக மட்டும் ரஷ்யாவில் உள்ள லீவ்காஸ்மோஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து பெங்களூருவிலும் ரஷ்யாவிலும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி முதல் இரண்டு பயிற்சிகள் பெங்களூருவிலும் மூன்றாவது பயிற்சி ரஷ்யாவிலும் வழங்கப்பட உள்ளது.

▪️விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 40 பயிற்றுநர்களுடன் 218 வகுப்புகள் நடைபெற உள்ளது. இது போக 75 உடற்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இவர்கள் விண்வெளியில் எப்படி நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்ள இரண்டு இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டியதும் மேலும் 12 மணி நேரம் என இரண்டு முறை பறக்கும் பயிற்சியும் இரண்டு மெடிக்கல் டெஸ்ட் மற்றும் இரண்டு தேர்வுகளும் எழுத வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

▪️மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டம், ககன்யான். இத்திட்டத்தின் மாதிரி *விண்கலம் சோதனை ஓட்டமானது இன்று (அக்டோபர் 21) நடைபெறும்* என்று இஸ்ரோ தரப்பில் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

▪️ககன்யான் சோதனை வாகனம், டிவி-டி1 ராக்கெட் மூலம் இன்று காலை 8 மணி அளவில் முதல் ஏவுதளத்தில் இருந்து லிப்ட் - ஆஃப் செய்யப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

▪️ வானிலை சரியில்லாத காரணத்தினால், இறுதியாக 8.45 ஆக நேரம் மாற்றப்பட்டது. ஆனால் ஏவுவதற்கு 5 விநாடிகளுக்கு முன்பு கவுண்ட்டவுனானது நிறுத்தப்பட்டது.

▪️ ககன்யான் சோதனை ஓட்டத்தின் முக்கிய நோக்கம் என்னவெனில்,  400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 3 நாட்களுக்கு ககன்யான் மாதிரி விண்கலம் அனுப்பி வைக்கப்படுவதும், பின் பாதுகாப்பாக அது பூமிக்கு திரும்புவதுமே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

▪️மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ராக்கெட்டிலிருந்து மனிதர்கள் இருக்கும் கலனை பூமியில் பத்திரமாக தரையிறங்க வைக்கும் மிஷன் இன்று பரிசோதனை செய்து பார்க்கிறது இஸ்ரோ. இதற்காக இஸ்ரோ தனியாக ஒரு ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறது.

▪️இந்த ராக்கெட்டின் உச்சியில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலன் (Crew Module) இருக்கும். இந்த கலனை ஏந்திக்கொண்டு ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும்.

▪️அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலை நோக்கி வரும். கடலுக்கும் கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைக்கும்.

▪️வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இந்த கலன் தரையிறங்கும். அங்கு கடற்படையினர் இந்த கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனையாகும்.

▪️ககன்யான் திட்ட மாதிரி விண்கலத்தின் சோதனை மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  திட்டமிட்டப்படியே விண்கலத்தின் மனிதர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து வங்கக்கடலில் இறக்கப்பட்டது.

இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது.

▪️தொழில் நுட்ப கோளாறு காரணமாக ககன்யான் திட்ட மாதிரி சோதனை தன்னிச்சையாகவே ஹோல்டானது. இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

▪️இந்நிலையில் டிவி-டி1 ராக்கெட்டில் எரிபொருள் பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், தற்போது என்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் காலை 10 மணிக்கு திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

▪️பூமியிலிருந்து புறப்பட்ட டிவி-டி1 ராக்கெட் 8 நிமிடங்களில் திட்டமிட்ட 17.6 கிலோமீட்டர் என்ற இலக்கை சென்றடைந்தது. பின்னர் அதில் பொருத்தப்பட்டுள்ள மனிதர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்தது. பின்னர் அதில் இணைகப்பட்ட மூன்று பிரம்மாண்ட பாராசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. ககன்கயான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை திட்டமிட்டப்படி வெற்றிகரமாக முடிந்துள்ளது.

வங்கக்கடலில் இறங்கிய விண்கலத்தின் மனிதர்கள் இறங்கும் கலன் இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளனர். இன்று மாலை அதனை இஸ்ரோ அதிகாரிகள் பெற்றுக்கொள்வார்கள்.

▪️மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை நிறைவடைந்த நிலையில் திட்டக்குழு விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டுக்களை தெரிவித்தார்..

ககன்யான் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் இந்தியா விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் நான்காவது பெரிய நாடாக இருக்கும். ஏற்கனவே அமெரிக்கா ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் வெற்றி பெற நாம் அனைவரும் இஸ்ரோ உடன் துணை நிற்போம்.

-  Dr. K. சுதா கல்வியாளர்