சத்குருவிற்கு செய்த அறுவை சிகிச்சையில் விதி மீறல்கள் இல்லை - நரம்பியல் மருத்துவர் செந்தில்நாதன்
isha
கடந்த சில நாட்களாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவிற்கு தலையில் வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவர், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான பர் ஹோல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அவர் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியானது. அதில் அவர் தாடி, மீசையுடன் இருப்பதை பார்க்க முடிந்தது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது தாடி, மீசை,கை.கால் உள்ளிட்ட உறுப்புகளில் உள்ள முடியை அகற்றிவிடுவது வழக்கமாக இருப்பதால் சத்குருவிற்கு நடத்தபட்ட அறுவை சிகிச்சையில் விதிகள் மீறப்பட்டுள்ளதா? என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து நரம்பியல் மருத்துவர் செந்தில்நாதன் அளித்த விளக்கம் : மூளை மற்றும் ஓட்டுக்கு இடையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ரத்தம் உறைந்து இருந்தால் அதை எடுப்பதற்காக பர் ஹோல் சர்ஜரி மேற்கொள்ளப்படுகிறது. அந்த அறுவை சிகிச்சையின் போது மண்டை ஓட்டில் 2 செ.மீ அகலத்துக்கு துளையிட்டு, உள்ளே உறைந்து இருக்கும் ரத்தக்கசிவை வெளியே எடுப்பார்கள். பொதுவாகவே சர்ஜரி செய்யும்போது உடல் முழுக்க ஷேவ் செய்ய வேண்டியது அவசியம். உடலில் எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்தாலும் இச்செயலைப் பின்பற்ற வேண்டும். அதற்கு பிறகுதான் நோயாளியை ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்து வருவார்கள். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது, கிருமி நீக்கம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட துணியை நோயாளியின் உடலில் போர்த்திவிடுவார்கள். எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ, அந்த இடத்தில் மட்டும் சிறிய அளவில் துணியை வெட்டி நீக்கிவிடுவார்கள்.
உடலின் மற்ற பகுதியைப் போர்த்தி மூடிவைத்துதான் அறுவை சிகிச்சை மேற்கொள்வார்கள். கிருமித் தொற்று உள்ளுறுப்புகளை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வார்கள். ஆனால் பர் ஹோல் சர்ஜரி செய்யும் போது உடல் முழுவதும் முடியை அகற்ற வேண்டிய அவசியம் இருக்காது.
ஏனென்றால் இந்த அறுவை சிகிச்சை முறையில் மண்டை ஓட்டில் 2 அல்லது 3 செ.மீ அகலத்துக்கு மட்டுமே துளையிடுவார்கள். அதற்காக அந்த இடத்தைச் சுற்றியுள்ள முடியை அகற்றினால் மட்டுமே போதுமானது. தலை முடி அல்லது தாடி முழுவதையும் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து நோயாளிகளுக்கும் இதே முறைதான் பின்பற்றப்படும்.
மேலும், சர்ஜரியின் போது உடல் முழுவதும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட துணியை வைத்து போர்த்திவிடுவார்கள். இதனால் தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்புகள் குறையும். மூளையின் எந்தப் பகுதியில் ரத்தம் கசிந்திருக்கிறது என்பதை ஸ்கேன் மூலம் கண்டறிந்த பிறகு அதற்கேற்றப்படி தலையில் துளையிட்டுச் செய்வார்கள்.
அறுவை சிகிச்சையின் மூலம் மண்டை ஓட்டைத் திறந்து மூளையிலுள்ள கட்டியை அகற்ற வேண்டும் அல்லது வேறு பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் தலையிலுள்ள முடி முழுவதையும் அகற்றிவிட்டுதான் செய்ய வேண்டும். அவசர அறுவை சிகிச்சை மற்றும் நுண் துளையின் மூலம் செய்யப்படும் சிகிச்சை என்ற நிலையில் அப்பகுதியை சுற்றிச் சுற்றி மட்டும் முடியை அகற்றிவிட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றார்.