முதல் ஆளாக வந்தும் மூன்றாவது ஆளாக வேட்பு மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் - ராமநாதபுரத்தில் சலசலப்பு
Ramanathapuram news
ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் ஜெயப்பெருமாள், திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் நவாஸ்கனி, பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இன்று(25.03.2024) வேட்பு மனு தாக்கல் செய்ய கோரியிருந்தனர். இதையடுத்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெயப்பெருமாள், ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அடுத்தடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல் ஆளாக தனது ஆதரவாளர்களுடன் வந்திறங்கினார் அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாள். அவர் அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் தனது படை பட்டாளத்துடன் வந்திறங்கினார். மனு தாக்கல் செய்ய சென்ற அதிமுக வேட்பாளர் தேவையான சில படிவங்களை எடுத்து செல்லவில்லை. அதனை எடுத்து செல்ல ஆட்கள் வெளியில் சென்றனர். இதனால் வெளியில் காத்திருந்த பன்னீர்செல்வம் அதற்கு முன்னதாக அழைக்கப்பட்டார். அதிமுகவினர் காத்திருந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் மனுதாக்கல் செய்து முடிக்கவும், திமுக கூட்டணி வேட்பாளர் வந்திறங்கினார். வெளியே வந்த பன்னீர்செல்வமும், உள்ளே சென்ற நவாஸ்கனியும் நேருக்கு நேர் சந்தித்து கை குழுக்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து திமுக வேட்பாளர் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் சென்று திரும்பிய பிறகுதான் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்பட்டது. முதலாவது வந்து மனு தாக்கல் செய்ய அழைக்கப்பட்ட பிறகும், அப்படி செய்ய முடியாமல் மூன்றாவது ஆளாக செல்லும் நிலை ஏற்பட்டதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.