பெயர் மட்டும் வைத்தால் போதுமா..? மருத்துவமனையின் விரிவாக்கம் என்னாச்சு..?ஸ்ரீவை தொகுதி மக்கள் பெரும் அதிருப்தி
Srivaikundam News

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை வரவேற்கும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சிலர், சில விமர்சனமும் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த சிலர், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் ஆன்மிக சிறப்புபெற்ற நகரமாக ஸ்ரீவைகுண்டம் அமைந்திருக்கிறது. சட்டமன்ற தொகுதியின் தலைநகரான ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் நிறைய கிராமங்கள் இருக்கின்றன. இயற்கை ததும்பும் அக்கிராமங்கள் விவசாயத்தை நம்பியே இருக்கிறது. விவசாயத்திற்கு தண்ணீர் ஆதாரமாக தாமிரபரணி ஆறு இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக அது பற்றாக்குறை கணக்கில் இருப்பதால் முப்போக விவசாயம் என்பது ஒருபோகமாக சுருங்கி போயுள்ளது. அதுமட்டுமில்லாமல் தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு தூர்ந்து போய் விட்டது. இதனால் போதுமான தண்ணீரை தேக்கி வைக்க இயலவில்லை. விவசாயம் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு உதவாமல் ஆற்றில் வரும் தண்ணீர் கடலுக்கு போவது அதிகமாக உள்ளது. எனவே, அணையை தூர் வாரிடவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதில் எந்த பலனும் எட்டப்படவில்லை.
கடந்த 2015ம் ஆண்டில் அப்போது மதிமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த ஜோயல் (இப்போது இவர் திமுக இளைஞரணியில் மாநில பொறுப்பில் இருக்கிறார்) பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து அணையை தூர் வாருவதற்கு ஏற்பாடு செய்தார். ஆனாலும், பல்வேறு அரசியல் காரணங்களால் இப்பணிகள் பாதியிலேயே நின்று போய் விட்டது. இதன்பிறகு ஸ்ரீவைகுண்டம் அணையை முழுமையாக தூர் வாரிடவேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிறைவேறுவதாக தெரியவில்லை.
ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஊர்வசிஅமிர்தராஜ் அணையை தூர் வாரவேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனாலும் எந்த பலனும் இல்லை. இதன்பிறகு இதனை தொகுதியின் எம்.எல்.ஏ.வான அவரும் கண்டுகொள்ளவதாக தெரியவில்லை. இதுபோலத்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஊர்வசிஅமிர்தராஜ் தொகுதியிலுள்ள ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும், தொகுதி மக்களின் தேவைகளுக்கும் சம்மந்தப்பட்ட அமைச்சர்களை சென்று சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்.
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஊர்வசிஅமிர்தராஜ் தனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை எல்லாம் சட்டசபையில் ஆழமாக எடுத்துரைத்தும், துறை சார்ந்த அமைச்சருடன் விரிவாக விளக்கியும் இதுபோன்ற திட்டங்களை பெற்று தரவேண்டும். மாறாக, பொதுமக்கள் போல் எம்.எல்.ஏவும் கோரிக்கை மனுக்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதற்கெல்லாம் தீர்வு கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அதேவேளை, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் திட்ட வேலைகள் குறித்த கொண்டாட்டங்கள் மட்டும் அடிக்கடி நடக்கிறது. எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள் இந்த திட்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஊர்வசிஅமிர்தராஜ் குரல் கொடுத்து தான் வந்தது என்று சமூகவலை தளங்களில் தம்பட்டம் அடித்து தங்களின் விசுவாசத்தை காட்டிக்கொள்கின்றனர்.
ஸ்ரீவைகுண்டத்தை பொறுத்தவரை அங்குள்ள அரசு மருத்துவமனை ஏராளமான கிராமமக்களுக்கு உயிர் காக்கும் பணியில் மிகப்பெரும் அமுதசுரபியாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனையை விரிவாக்கம் செய்யவேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் 10வருடத்திற்கும் மேற்பட்ட கோரிக்கையாகும். ஆனால், இந்த விரிவாக்கம் இதுவரை நடக்கவே இல்லை. அதாவது கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போது இருந்த அதிமுக எம்.எல்.ஏ.,வான முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் இதற்கான பணிகளை மிகவும் முனைப்புடன் மேற்கொண்டார்.
அரசு மருத்துவமனையின் விரிவாக்கத்திற்காக நகருக்குள் செயல்பட்டு வந்த தாலுகா அலுவலகத்தை கடுமையான எதிர்ப்புகள் இருந்தபோதும் புதுக்குடிக்கும் இடம் மாற்றினார். அதோடு பழைய தாலுகா அலுவலக வளாகத்துடன் அரசு மருத்துவமனையை இணைத்து கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், அனைத்து நவீன மருத்துவ கருவிகளுடன் கூடிய அதிநவீன வசதிகளை கொண்டு வரவும் முனைப்புடன் செயல்பட்டார். ஆனால், அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.
இதன்பிறகு வந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஊர்வசிஅமிர்தராஜ் அரசு மருத்துவமனையின் விரிவாக்கம் குறித்து கோரிக்கை விடுத்து வருவது மட்டும் தெரிகிறது. ஆனால் அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த போற்றுதலுக்குரிய சிறந்த மனிதர் நல்லக்கண்ணுவின் 100வது பிறந்தநாளில் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணுவின் பெயரை தமிழக முதல்வர் ஸ்டாலின் சூட்டினார். உடனே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஊர்வசிஅமிர்தராஜ் ஆதரவாளர்கள் இதற்கு முழுக்க முழுக்க காரணம் எங்க எம்.எல்.ஏ., தான் என்று வழக்கம்போல தம்பட்டம் அடித்துக்கொண்டனர்.
ஆயிரக்கணக்கான மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்திடும் அரசு மருத்துவமனையின் விரிவாக்கம், கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகள், காலியான பணியிடங்களை நிரப்புதல் என அனைத்தும் கிடப்பிலேயே கிடந்து வருகிறது. இந்த மருத்துவமனையில் சீட்டு கொடுக்கவும், நோயாளிகளின் காயங்களுக்கு மருந்து கட்டவும், மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்கள் இல்லை. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. செவிலியர்கள் பற்றாக்குறையும் காலகாலமாக தொடர்கிறது. மழைவெள்ளத்தால் சேதமான கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டும் திட்டமும், பிரேத பரிசசோதனை மையம் கட்டும் பணியும் இதுவரை வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது.
இதனையெல்லாம் சரி செய்யவேண்டும் என்று கடந்த 10வருடங்களாக பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ஊர்வசிஅமிர்தராஜ் இதே கோரிக்கையை கடந்த 4வருடங்களாக வெறும் மனுக்களாகவே கொடுத்து வருகிறார். வேலைஎதுவும் நடந்தபாடில்லை. அதனால் தொகுதி மக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவை ஊருக்குள் பஸ்கள் முறையாக வருவதில்லை, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை தூர் வாரவில்லை. டவுன் பஞ்சாயத்தில் கூடுதல் நீர்தேக்க தொட்டிகள் இல்லை, புதிய நீதிமன்ற வளாகம் கட்டப்படவில்லை, தொகுதியில் தொடர்ந்து அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்க முனவரவில்லை, விவசாயத்தை மேம்படுத்த இதுவரை எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை., வணிக நகரமான ஏரலில் அடிப்படை வசதிகள் இல்லை, ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலம் வெள்ளம் வந்து போய் ஆண்டுகள் முடிந்தும் இன்னும் சரி செய்யப்படவில்லை, தொகுதியில் விவசாயத்தை அழிக்கும் வகையில் ஆங்காங்கே முறையான அனுமதியில்லாமல் அறிவிக்கப்பட்டு வரும் கல்குவாரிகளை தடுக்கவும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் முன்வரவில்லை, இப்படியாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள், தேவைகள் எல்லாம் இல்லை இல்லை என்ற ரீதியிலேயே இருந்து வருகிறது.
அரசு மருத்துவமனைக்கு பெயர் வைக்க நான் தான் காரணம் என்று கூறும் எம்.எல்.ஏ., அந்த மருத்துவனையின் விரிவாக்கம் வெறும் அறிவிப்பாகவே இருந்து வருவதை அறியவில்லை போல. அரசு மருத்துவமனைக்கு பெயர் மட்டும் வைத்தால் போதுமா..? அங்கு நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் எல்லாம் தேவை என்பதை இனியாவது மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து செயல்படுவது மிகவும் அவசியமாகும்.
இனியாவது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசிஅமிர்தராஜ் சட்டசபையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக எப்போதும் கை தட்டாமல், தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக சட்டசபையின் மேஜையை பலமாக தட்டி பேசி குரல் கொடுத்து தொகுதிக்கு தேவையான திட்டங்களை பெற்று தந்திடவேண்டும் என்று கூறிவருகின்றனர்.