தூத்துக்குடி ஆஸ்பத்திரி அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு நேரமும் உணவு - மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு

Thoothukudi Mayor N.P.Jegan

தூத்துக்குடி ஆஸ்பத்திரி அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு நேரமும் உணவு - மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு

தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு சாப்பாடு நேரத்திலும் உணவு கிடைக்க மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு செய்திருக்கிறார். 

நாடு முழுவதும் 77வது சுதந்திரத்தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைநகர் டில்லியில் கொடியேற்றி பேசியிருக்கிறார். சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி பேசி வருகிறார்.  

இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திரத்தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இணை ஆணையர் ராஜாராம் வரவேற்றார். துணை மேயர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வணங்கி இனிப்புகள் வழங்கினார். பின்னர் 25வருடம் சிறப்பாக பணியாற்றியவர்கள், மற்றும்  தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், பசுமையை உருவாக்கும் வகையில் மரம் நடுதல் செய்தவர்கள், மாநகராட்சி வளர்ச்சிக்கு தனியார் பங்களிப்புடன் உதவியவர்கள் என மொத்தம் 100 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கினார்.  

அப்போது அவர், ''மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிக்கப்படுத்த அதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் கல்லூரி, சிவந்தாகுளம் அருகில் உள்ள பள்ளி வளாகங்களில் ஏ.சி வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கிறோம். இதன் மூலம் புத்தகம் வாசிப்போரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் என நம்புகிறோம்.

மேலும் சமீபத்தில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, நோயாளிகளுடன் வந்திருப்போர் பகல் நேரங்களில் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சகாய விலையில் உணவு கிடைக்கிறது. அதனை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இரவு சாப்பாடு நேரத்தில் அம்மா உணவகம் மூடப்பட்டுவிடுவதால் நாங்கள் இரவு நேரங்களில் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகிறோம் என்று தெரிவித்தனர். அதனை கருத்தில் கொண்டு இரவு சாப்பாட்டு நேரம் வரை அம்மா உணவத்தை திறந்து வைத்திருக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அம்மா உணவகத்தில் இரவு சப்பாத்தி வழங்கப்படும். 

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய திட்டம் தொடங்கியிருக்கிறோம். அதாவது அளவு சிறிதாகிவிட்டது என்பன உள்பட பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்திய பழைய ஆடைகளை என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் சும்மா வைத்திருப்பர். அப்படிப்பட்ட பழைய ஆடைகளை மாநகராட்சியில் ஒதுக்கப்பட்டிருக்கும் அறையில் கொடுத்துவிடலாம். அதனை ஆடை தேவைப்படும் ஏழை, எளிய மக்கள் வந்து கேட்கும்போது அது அவர்களிடம் கொடுக்கப்படும். 

மாநகராட்சி பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தினசரி குடி தண்ணீர் கிடைப்பதும், சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு மறு நாள்தான் தண்ணீர் கிடைப்பதுமான நிலை இருந்து வருகிறது. இதனை மாற்றி விரைவில் அனைத்து பகுதி மக்களுக்கும் ஒரே மாதிரியாக தினசரி தண்ணீர் கிடைக்கும்படி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் மாநகராட்சி பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது. அவர்கள் குடும்ப அட்டை வைத்திருந்தால் அவர்களுக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். 

விழாவில் செயற்பொறியாளர் பாஸ்கர் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் நிர்மல்ராஜ்,  பாலகுருசாமி,கலைச்செல்வி , அன்னலட்சுமி,  உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் அரிகணேஷ், ராஜபாண்டி, ராஜசேகர். ஸ்டாலின் பாக்கியநாதன் , கவுன்சிலர்கள் இசக்கிராஜா,  கீதாமுருகேசன், கனகராஜ்,சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன்,சந்திரபோஸ், தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்சிலின் ,வைதேகி, ரெங்கசாமி,  ரிக்டா,  கந்தசாமி, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். திட்ட பொறியாளர் ரங்கநாதன் நன்றி கூறினார்.