100 சதவீதம் வேலை முடிந்தவுடன் ஸ்மார்ட் சிட்டி பஸ்ஸ்டாண்ட் திறக்கப்படும் - மேயர் ஜெகன் பெரியசாமி
thoothukudi Mayor N.P.Jegan
துத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் ஸ்டாண்ட் 100 சதவீதம் பணிகள் முடிந்த பிறகு திறக்கப்படும். அந்த விழா மிக விரைவில் நடைபெறும் என்று மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பழைய பஸ்ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மேம்படுத்தபட்ட பஸ்ஸ்டாண்ட்டாக உருவாக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து விரைவில் அது பயன்பாட்டிற்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், கடந்த மாதம் உள்ளூர் அமைச்சர் கீதாஜீவன் தரப்பில், 30ம் தேதி(செப்டம்பர்) பஸ்ஸ்டாண்ட் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் திறப்புவிழா நடைபெறவில்லை. அதற்கான காரணம் பெரிய அளவில் அறிவிக்கப்படவில்லை. எனவே குழப்பம் நிலவி வந்தது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, இன்னும் வேலைகள் இருக்கு, வேலை முடிந்ததும் திறப்புவிழா நடக்கும். விரைவில் அதனை எதிர்பார்க்கலாம் என்று குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை ஆணையர் ராஜாராம், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசும்போது, ’’மகளிர் உரிமைத்தொகை மாதந்திரம் ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த மாநகராட்சி கூட்டத்தில் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தூத்துக்குடியில் பழைய அண்ணா பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நவீன பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது. இதில் 95 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் முடிந்ததும் பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிதாக ரோடுபோடும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது இந்த பணிகள் அனைத்தும் வருகிற 30ம் தேதிக்குள் முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் குடிதண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மழை காலம் வர இருப்பதால் பக்கிள் ஓடையில் உள்ள அமலை செடிகள், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
தூத்துக்குடியில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. மாநகராட்சி பகுதிகளில் தினசரி 150 களப்பணியார்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நகர் நல அலுவலகம் மற்றும் நகர்ப்புற சுகாதார மையங்களில் காய்ச்சல் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் 120 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாதவாறு 6 வழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் பொதுமக்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்’’ என்றார்.
பின்பு மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்னப்பன், ராமகிருஷ்ணன், தேவகி, கனகராஜ், ராமலட்சுமி, ரெக்ஸ்லின் உள்ளிட்டோர் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை பேசினார்கள். அதற்கு, அனைத்து வார்டுகளிலும் உள்ள குறைகள் தீர்க்கப்படும். குப்பைகளை முறையாக அகற்ற ஒப்பந்ததாரர்கள் மூலமாக ஒரு வாரத்தில் அதற்குறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர், துணை செயற்பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் சுமதி, மண்டல உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், ராமச்சந்திரன், சந்திரமோகன், நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள், கலைச்செல்வி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், பாலகுருசாமி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பஸ்ஸ்டாண்ட்டில் கடைகள் குறித்த டெண்டர் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. கடைகளுக்கு கதவுகள் போடுவது உள்பட சில பணிகள் இன்னும் இருக்கிறது. அது விரைவில் முடிக்கப்படும். அநேகமாக தமிழக சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடம் இம்மாதம் 15ம் தேதியோ அதற்கு பிறகோ? திறக்கப்படும் என்கின்றனர் மேயர் தரப்பு.