அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக தூத்துக்குடி இருக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

election news

அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக தூத்துக்குடி இருக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக தூத்துக்குடி இருக்க வேண்டும். இதற்கு இன்னும் இருக்கிற நான்கு நாட்களும் இதே உற்சாகத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். தூத்துக்குடியில் இப்படி பிரசாரம் செய்திருக்கிறார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.

மேலும் அவர், கனிமொழியை எதிர்த்து போட்டியிடுவோர் இனிமேல்  தூத்துக்குடி பக்கமே திரும்பி பார்க்க கூடாது. அந்த அளவிற்கு நீங்கள் அவர்களுக்கு தோல்வியை கொடுக்க வேண்டும். நான் கடந்த 2021ம் ஆண்உ நடைபெற்ற சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்திற்கு வந்தேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று நீங்கள் கீதாஜீவனை 51 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றி வருவதற்கு நீங்கள்தான் அங்கீகாரம் அளித்தீர்கள். அதே போல் இந்த தொகுதியில் கனிமொழியும் கடந்த 5 ஆண்டுகாலம் ஆற்றிய பணிகள் ஏராளம். குறிப்பாக இந்த மாவட்டத்தில் ரூ.16ஆயிரம் கோடியில் மின் கார் தொழிற்சாலை, பர்னிச்சா் பார்க் அமையவுள்ளது. ரூ.440 கோடியில் மாநகராட்சி பகுதியில் மழை நீர் வடிகால், சாலைப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. ரூ.136 கோடியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. திரேஸ்புரத்தில் ரூ.21 கோடியில் மீன்பிடி இறங்குதளம், மீன்பிடி துறை முகத்தில் ரூ.10 கோடியில் வளர்ச்சி திட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் காரணம் கனிமொழிதான். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வௌ்ள காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சரிடம் பேசி இரண்டாயிரம் கோடி பெற்ற தந்தவர்தான் இந்த கனிமொழி. மழை வௌ்ள காலத்தின் போது சேலத்தில் இருந்த என்னை முதலமைச்சர் தொடர்பு கொண்டு தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு செல்ல உத்தரவிட்டதும், உடனே இங்கு நான்கு நாட்களும், திருநெல்வேலியில் 10 நாட்களும் தங்கி பணியாற்றினேன். 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு பணியாற்றியதின் காரணமாக 3 நாட்களில் மீட்பு பணியை செய்தோம். கனிமொழி இரண்டு மாதம் இங்கேயே இருந்து மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து நீங்கள் அவரை அனுமதிக்கும் போது மேலும் பணியாற்ற காத்திருக்கிறார் என்றார்.