தி.மு.க. விற்கு விழுந்த அ.தி.மு.க. வாக்குகள்!

ADMK - DMK

தி.மு.க. விற்கு விழுந்த அ.தி.மு.க. வாக்குகள்!

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதன் எம்.எல்.ஏ.ஈவி.கே.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, 8 ஆம் முடிவு வெளியானது. அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க.,- ஆகிய கட்சிகளெல்லாம் ஒதுங்கிக் கொள்ள, நா.த.க.. மட்டும் சீதாலெட்சுமி என்ற வேட்பாளரை களமிறக்கியது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் நா.த.க. வேட்பாளரை விட 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

2023 பிப்ரவரி மாதம் இந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில்,காங்கிரஸ் 64.58 சதவிகித வாக்குகளும், நா.த.க 6.35. சதவிகித வாக்குகளும், அ.தி.மு.க., - பா.ஜ.க கூட்டணி 25.75 சதவிகித வாக்குகளும் பெற்றன. இந்த முறை அ.தி.மு.க., பா.ஜ.க இரண்டுமே போட்டியிடாத நிலையில், தி.மு.க.விற்கு 10 சதவிகித வாக்குகள் அதிகரித்திருக்கிறது. கடந்த இடைத் தேர்தலை விட ஆறு சதவிகித வாக்குகள் குறைவாக பதிவானதும், நோட்டாவிற்கு சுமார் நான்கு சதவித வாக்குகள் விழுந்துள்ளதும்  அ.தி.மு.க.வின் வாக்குகளாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இது தவிர தி.மு.க. விற்குக் கூடியிருக்கும் 10 சதவித வாக்குகளாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பது தான் பலருக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.

இதற்கு தி.மு.க அமைச்சர் எஸ்.முத்துச்சாமி ஒரு முக்கிய காரணம். இந்த இடைத்தேர்தலில் பொதுக் கூட்டம், மைக் பிடித்து வாக்கு சேகரிப்பு, கூட்டணி கட்சிகளின் பிரசாரம் என்று எதையும் அவர் அனுமதிக்க வில்லை. ‘அப்படி மைக் பிடித்து பிரசாரம் செய்தால் நிச்சயம் அ.தி.மு.க.வை வசை பாடும்  சூழல்  ஏற்படும். களத்தில் இல்லாத அ.தி.மு.க.வை  வசைபாடி அங்கிருந்து வரும் வாக்குகளை ஏன் தடுக்க வேண்டும்? என்று முடிவெடுத்த அமைச்சர் முத்துசாமி,  சுமார் 40கி.மீ. நடந்து மட்டுமே வாக்கு கேட்பது என்று முடிவெடுத்து வேட்பாளரோடு நடையாய் நடந்தார். தெருக்களில் அ.தி.மு.க தொண்டர்களை மட்டுமல்லாது, நிர்வாகிகளையும்  சந்தித்து வாக்கு கேட்டதன் விளைவுதான், கணிசமான அ.தி.மு.க வாக்குகள் மடை மாறியிருக்கின்றன.

நா.த.க.வின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த இடைத் தேர்தலில் பெரியாரைப் பற்றி கடுமையான் விமர்சனங்கள் வைத்த நிலையில், செய்தியாளர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் அது குறித்து தினசரி கேள்வி கேட்டும் அமைச்சர் முத்துசாமி அதற்கு பதில் கூறவேயில்லை. ‘நா.த.க. பற்றி தி.மு.க. பேச ஆரம்பித்தால், அந்தக் கட்சிக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது விடும் : தினசரி வாதம் , எதிர்வாதம் என்று முடிவெடுத்த முத்துச்சாமி, நா.த.க. பற்றிய விமர்சனங்களை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க சுமார் 22 சதவிகித வாக்குகளும், பா.ஜ.க.கூட்டணியில் த.மா.கா.(மூ) சுமார் 8 சதவிகித வாக்குகளும் பெற்றிருந்தன. மற்ற கட்சிகள் களத்தில் இல்லாதபோது, தி.மு.க.விற்கு எதிரான அந்த 38 சதவிகித வாக்குகள் சீமானுக்கு வரக்கூடும் என்று மேலோட்டமாக ஒரு கணக்கு சொல்லப்பட்டது. ஆனால் அது களத்தில் உருப்பெறவில்லை.

பெரியாரைக் கடுமையாக் விமர்சனம் செய்தால் , பா.ஜ.க.வின் 8 சதவிகித வாக்கு முழுமையாக சீமானுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்ட போதும், வட இந்தியர்களும், நாயுடு, அருந்ததியர் உள்ளிட்ட தெலுங்கு பேசும் சமூகத்தினரும், தமிழ் தேசியம் பேசும் நா.த.க.விற்கு வாக்களிக்க முன்வரவில்லை. மேலும் தேர்தல் பிரசாரத்தில் சீமான் திடீரென்று திப்பு சுல்தானை தூக்கிப் பிடித்தையும் பா.ஜ.க., ஆதரவாளர்கள் சிலர் ஏற்கவில்லை. அதனால் தான் நா.த.க. டெபாஸிட் பெற முடியாமல் 15 சதவிகிதத்திலேயே முடங்கி விட்டது.

ஆக மொத்தத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், ‘ அ.தி.மு.க. வாக்குகள் சிதறிப் போய், தி.மு.க.விற்கு விழக் கூட தயாராகி விட்டது’ என்ற உண்மையைத்தான் உரக்கச் சொல்லியுள்ளது.