நீயா நானா? மல்லுகட்டுக்கிடையே எடப்பாடியாரின் சாதனைகளை விளக்க திண்ணை பிரசாரம் !- அதிமுக அம்மா பேரவை தீவிரம்

A.D.M.K

நீயா நானா? மல்லுகட்டுக்கிடையே எடப்பாடியாரின் சாதனைகளை விளக்க திண்ணை பிரசாரம் !- அதிமுக அம்மா பேரவை தீவிரம்

வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல். இதில் பிரதான கட்சியான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிதான் தற்போது பொதுச்செயலாளர் என்கிற போதிலும், ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் அவ்வப்போது அசைத்து பார்க்கும் ஆட்டத்தால் ஆணி வேர் போட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. 

வலுவான கூட்டணி பலம் கொண்ட திமுக அணியை எதிர்கொள்ள வலுவான எதிரணி வேண்டும் என்கிற பொது கருத்துக்கள் நிலவி வந்தாலும், குறிப்பிட்ட கட்சிகளையோ, குறிப்பிட்ட நபர்களையோ இணைத்து களம் காண்பதில்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பிடிவாதமாக இருக்கிறது. அந்த பிடிவாதம் கடந்த காலம் போல் இறுக்கமாக இல்லை என்றாலும் ஒத்து போவதில் உடன்பாடில்லா நிலை இருப்பதை பார்க்க முடிகிறது. இந்தநிலையில் தன்னையும், தன்னுடன் இருப்பவர்களையும் உறுதிபடுத்தும் கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால் தமிழகம் முழுவதும் எதிர் கட்சி என்பதை வைத்து ஆளும் கட்சியை விமர்சனம் செய்வதை மட்டும் செய்யாமல், கடந்த காலத்தில் தன்னுடைய ஆட்சி காலத்தில் செய்த நன்மைகளையும் மக்களிடம் விளக்க வேண்டும். குறிப்பாக தனது கட்சியினர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக திண்ணை பிரசாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவில் சிலர்.   

அந்த வகையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம் செய்து அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் சாதனைகளை எடுத்துரைக்க வேண்டும் என அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் திண்ணைப் பிரச்சாரத்தை நடத்துவது குறித்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கழக செயலாளர்கள், அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 18.02.2025 தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான கே. விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு பேசும்போது,  அதிமுக அம்மா பேரவை சார்பில் பிப்ரவரி 21ம் தேதி முதல் வரும் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமைகளிலும் முந்தைய அதிமுக அரசின் சாதனைகளையும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு செய்த நல்ல திட்டங்களையும் விடியா திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அனைத்து துறைகளிலும் பொதுமக்களை பாதிக்கும் வரி உயர்வு நிர்வாக சீர்கேடு இவைகளை பொதுமக்களிடம் தெரியப்படுத்தும் விதமாக வீதி வீதியாக சென்று வீடுகளில் திண்ணைப் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் நேரடியாக வழங்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் 2026 இல் முதலமைச்சராக வர அனைத்து வகையான பிரச்சாரங்களையும் இப்போதே துவங்க வேண்டும் என்றார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான என். சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம் பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், 

மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய் கணேஷ், பகுதி பொறுப்பாளர் சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், பூந்தோட்டம் மனோகரன், அச்சம்பாடு சௌந்தரபாண்டி, பேரூராட்சிக் கழக செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், வேதமாணிக்கம், துரைசாமி ராஜா, செந்தில் ராஜ்குமார், அசோக் குமார், ஆறுமுகநயினார், கோபாலகிருஷ்ணன், நாசரேத் கிங்ஸ்லி, சோமசுந்தரம், வீர வெற்றிவேல், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ்பாபு, துணைச் செயலாளர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், ஓடைக்கரை கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் வக்கீல் முனியசாமி, நாசரேத் ஞானையா, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், ஆத்தூர் அறிவுடை நம்பி பாண்டியன், பால மேனன், தென்திருப்பேரை கந்தன், 

மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் பொன்னுதுரை, காந்தி ராமசாமி, அமுத்துன்னாகுடி சின்னதுரை, ஜெயசிவசுப்பிரமணியன் ரத்தினசபாபதி, எஸ்.கே. மாரியப்பன் பூக்கடை வேலு, பொன் ராஜா, ஐயப்பன், பாலஜெயம், சாம்ராஜ், பண்டாரவிளை பாஸ்கர், சந்தன பட்டு, செல்வ மாரியப்பன், நாசரேத் தினகரன் , பரிபூரண ராஜா, சொக்கலிங்கம், சிதம்பர ராஜா, சகாயராஜா ஆனந்த் உள்ளிட்ட பலரும் இருந்தனர். முடிவில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம் நன்றி கூறினார்.