ஆளுநரை கொச்சைப்படுத்துவது கட்டமைப்பை சீர்குலைக்கும் செயல்

NEET NEWS

ஆளுநரை  கொச்சைப்படுத்துவது  கட்டமைப்பை சீர்குலைக்கும் செயல்

மக்களை ஒன்று சேர்த்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதுடன் கூட்டமைப்பை பாதுகாப்பதே அரசு நிர்வாகமாகும். அப்படிப்பட்ட அரசு நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதிகள், ரத்தமும் சதையும் என்றால் அதிகாரிகள் எழுந்து நிற்க உதவும் எலும்பு போன்றவர்கள். ஆக, அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து நடத்துவதே நிர்வாகமாகும். அதிகாரிகள் சட்டத்தையும், மக்கள் பிரதிநிதிகள் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். அந்த வகையில்தான் மாநில அளவில் அதிகாரிகள், மாநில அளவில் மக்கள் பிரதிநிதிகள், மத்திய அளவில் அதிகாரிகள், மத்திய அளவில் மக்கள் பிரதிநிதிகள் என்று கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இவைகளுக்கெல்லாம் மேலாக ஜனங்களுக்கெல்லாம் அதிபதியாக, சேனாவுக்கெல்லாம் தளபதியாக அனைவரையும் கண்காணிக்கும் பொறுப்பு கொண்ட அதிகாரி ஒருவர் இருக்கிறார் அவர்தான் ஜனாதிபதி. மக்கள் பிரதிநிதிகள் சபையில் கூடி முடிவெடுப்பதை ஆராய்ந்து பார்த்து ஒப்புதல் அளிப்பது இவரே. ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகே திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருகிறது. அப்படிப்பட்ட அதிகாரம் பொறுந்திய அதிகாரத்தின் மாநில பிரதிநிதிதான் ஆளுநர் என்கிற பதவி. 

சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஆராய்ந்து பார்ப்பது, முதல்வருக்கு ஆலோசனை வழங்குவது, மாற்றம் எதுவும் செய்ய வேண்டியது இருப்பின் அதனை சுட்டிகாட்டுவது, ஏற்க முடியாத தீர்மானங்களை நிராகரிப்பது என்று மாநில அளவிலான முடிவுகளை கண்காணிப்பவர் ஆளுநர். தேசிய அளவிலான விவகாரமாக இருந்தால் அதை அவர் ஜனாதிபதி கவனத்துக்கு கொண்டு செல்வார். அவை நிறைவேற்ற தகுந்ததாக இருந்தால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார். 

ஆளுநர் மற்றும் ஜனாதிபதியிடம் சென்ற மனுக்களுக்காகன பதில் வருவதற்கு தாமதமானால் மீண்டும் கோரிக்கை வைக்கலாமே தவிர நிர்பந்திக்க முடியாது. ஏன் எதற்கு என்று காரணம் கேட்க கூடாது என்கிறது அரசியல் அமைப்பு சட்டம். ஆளுநரிடம் சென்ற மனு திருப்பி அனுப்பபட்டால் அதை சபையில் வைத்து தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் ஆளுநரிடம் அனுப்பலாம். அந்த மனு ஏற்க கூடியது என்றால் ஆளுநர் ஏற்கலாம் முடியாது என்றால் அதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிடலாம். இறுதி முடிவு ஜனாதிபதி எடுப்பார். நான் ஏற்கனவே கூறியது போல் ஆளுநரோ, ஜனாதியோ ஒரு மனுவை கிடப்பில் போட்டால் அது குறித்து நீதி மன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. 

நிலமை இப்படி இருக்கும்போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் ஆளுநருக்கு எதிராக கருத்து சொல்வது போராட்டம் நடத்துவது என்று அப்பதவியை அவமதிப்பு செய்துவருகின்றனர். நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் எதிர்க்கின்றனர். இது அவர்களின் கொள்கையாக இருக்கிறது. அதனை யாரும் தவறென்று கூறவில்லை. அதற்காக அதனை வைத்து ஆளுநர் என்கிற பதவியை துச்சமாக மதிக்கும் செயலில் ஈடுபடுவது நாம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை சிதைக்கும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது. 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீட் தேர்வு நடத்தபடுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நடத்தப்படும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு இல்லை. கல்வியை பொறுத்தவரை தேசிய பட்டியலில் இருக்கிறது. அதனை முடிவு செய்ய மத்திய அரசுக்கு உரிமை உண்டு. நீட் தேர்வு நடத்திய பிறகு ஏழை, எளிய குடும்பத்தில் உள்ள மாணவர்களும் மருத்துவம் படிக்க முடிகிறது என்கிற ஆதாரம் இருக்கிறது. 

இருந்தாலும் நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக உள்ளிட்ட அதன் தோழமை கட்சிகள் கூறிவருகின்றன. அதுமட்டுமில்லாமல் அதற்கு கருத்து சொன்ன ஆளுநரை கடுமையாக சாடுகின்றனர். அமைச்சராக இருக்கும் உதயநிதி, ஆளுநரை போஸ்ட் மேன் வேலைதான் பார்க்கணும் என்று அவமதிக்கிறார். நேற்று (20.8.2023) தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியால் நடத்தப்பட்ட நீட்க்கு எதிரான உண்ணாவிரத போராட்டம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டமாக நடத்தப்பட்டதாகவே பார்க்க முடிகிறது. ஆளுநரை கண்டிக்க கூடாது,அவரை விமர்சனம் செய்ய கூடாது, நீதிமன்ற உத்தவுக்கு எதிராக போராட்டம் நடத்த கூடாது என்கிற நடைமுறையையெல்லாம் குப்பையில் தூக்கி போட்டுவிட்டு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் என்று திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அப்படி சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் நிறைவில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‘’நீட் தேர்வு தேவையில்லை என, ஐந்து ஆண்டுகளாக பேசிவிட்டேன்; இனியும் பேச தயாராக உள்ளேன். நான் அமைச்சராக பங்கேற்கவில்லை; சாதாரண மனிதனாக பங்கேற்றுள்ளேன்; அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை என்றுதான், போராட்டத்தில் பங்கேற்றேன். 

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து, கவர்னர் ஒரு கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், நீட் தேர்வை எப்போது ரத்து செய்வீர்கள் என மாணவரின் தந்தை கேட்ட கேள்விக்கு நான் ஒரு போதும் செய்ய மாட்டேன் என கவர்னர் திமிராக பதில் அளித்துள்ளார். 

முதல்வர் சொல்வதை, மத்திய அரசிடம் சொல்லும், தபால்காரர் வேலைதான் கவர்னரின் வேலை. அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கவர்னர் பெயர் ஆர்.என்.ரவி கிடையாது; ஆர்.எஸ்.எஸ்.,ரவி. உங்களுக்கு நான் ஒரு சவால்விடுகிறேன். கவர்னர் பதவியை ராஜினமா செய்துவிட்டு வாங்க..நீங்களே தமிழகத்தில் எதாவது ஒரு தொகுதியை முடிவு செய்து நில்லுங்கள். உங்களை எதிர்த்து திமுகவின் கடைக் கோடி தொண்டனை நிறுத்துகிறோம். உங்களால் ஜெயிக்க முடியுமானால் மக்களைச் சந்தியுங்கள். உங்களை தமிழக மக்கள் செருப்பால் அடிப்பார்கள்.

உங்கள் சித்தாந்தங்களை தமிழக மக்களிடம் கொடு செல்லுங்கள். நீங்கள் வெற்றிபெற்றுவிட்டு வாருங்கள்; நீங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்கிறேன். தமிழக மாணவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். தகுதியற்ற நீட் தேர்வை ஒழித்தால்தான், தமிழகத்துக்கு விடியல். நீட் தேர்வுக்கு எதிரான இந்த போராட்டம் ஆரம்பம் தான். டில்லியில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும். இது குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்படும். 

மதுரையில் நடத்தும் அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள் பார்ப்போம். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள் பார்ப்போம். இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக இணைந்து, டில்லியில் போராட்டம் நடத்த, அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கிறேன். வாருங்கள்;பிரதமர் இல்லம் முன் அமர்ந்து போராடுவோம். வரும் லோக்சபா தேர்தலில், பாஜவை விரட்டுங்கள்; காங்கிரஸை ஆட்சியில் அமர வையுங்கள் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்து காட்டுவார்கள்’’ என்று பேசியிருக்கிறார். 

நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் ஆளுநரை அவமதிப்பு செய்வது, அரசியல் கட்டமைப்பை அவமதிப்பதற்கு சமமாகும். எனவே முதல் அமைச்சர் முதல் சக அமைச்சர்கள், எம்.பிக்கள் என்று திமுகவில் இருப்போர் இதுபோன்ற கொச்சைப்படுத்தும் அரசியலை நிறுத்தவேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லது.