தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ரூ.10 கோடி உபரி வருவாய் பட்ஜெட் - மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்

N.P.Jegan

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் ரூ.10 கோடி உபரி வருவாய் பட்ஜெட் - மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார்

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண மற்றும் பட்ஜெட் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான உத்தேச வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியில் 2024-25ம் நிதியாண்டில் வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி, வரியில்லா இனங்கள், முத்திரை கட்டணம், கேளிக்கை வரி, 15வது நிதிக்குழு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதி உள்ளிட்ட வருமானம் மூலம் ரூ.153 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரம் வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடப்பு ஆண்டிற்காக சம்பளம், ஓய்வூதியம், நிர்வாக செலவினங்கள் சாலை, கட்டிடங்கள் பராமரிப்பு, இயக்க செலவினங்கள், பொது நிதி பங்களிப்பு என மொத்தம் ரூ.152 கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் செலவாகும் என்றும், இதில் ரூ.54 லட்சத்து 21 ஆயிரம் உபரியாக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் குடிநீர் வரி மற்றும் பயன்பாட்டு கட்டணம் மற்றும் இதர வருமானமாக ரூ.52 கோடியே 38 லட்சத்து 60 ஆயிரம் வருமானமாக கிடைக்கப்பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சம்பளம், ஓய்வூதியம், குடிநீர் பணி இயக்கம் மற்றும் பராமரிப்பு பணி, நிர்வாக செலவினங்களுக்காக மொத்தம் 45 கோடியே 32 லட்சத்து 21 ஆயிரம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உபரியாக ரூ.7 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம் கிடைக்கும் என்றும், நடப்பு ஆண்டில் கல்வி வரி மற்றும் இதர வருமானம் மூலம் ரூ.6 கோடியே 49 லட்சத்து 3 ஆயிரம் கிடைக்கும் என்றும், இதில், பராமரிப்பு செலவினங்கள், நிர்வாக செலவினங்கள் ஆகியவற்றிற்கு ரூ.3 கோடியே 22 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உபரியாக ரூ.3 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வரும் நிதியாண்டில் மாநகராட்சிக்கு  மொத்தம் ரூ.10 கோடியே 87 லட்சத்து 63 ஆயிரம் உபரி வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது, 34வது வார்டுக்கு உட்பட்ட தேவகிநகரில் உள்ள பூங்கா மற்றும் நூலகங்களை சீரமைத்து வர்ணம் பூச வேண்டும். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், சொத்துவரி, குடிநீர் வரியில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் முழுமையாக அவற்றை வெளியேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதோடு, கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.

இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் வரலாறு காணாத மழை பெய்தது. மாநகரை சுற்றி 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. பல இடங்களில் 5 நாட்களுக்குள் மழைநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டது. சில இடங்களில் இன்னும் கூடுதலாக சில நாட்கள் ஆனது. ஆனாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கையால், கனிமொழி எம்.பி, அமைச்சர்கள், கலெக்டர், ஆணையர், கவுன்சிலர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீண்டு வந்துள்ளோம். இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநகராட்சியில் 1540 சாலைகள் போடும் பணி நடந்தது. மழை காரணமாக இதில் தொய்வு ஏற்பட்டது 375 சாலைகள் அமைக்கப்படாமல் இருந்தது. வெள்ளத்துக்கு பிறகு மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு 471 சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 500 மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 1900 விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி குப்பைகளை பிரித்துக் கொடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதாரத்தில் இந்தியாவில் 126வது மாநாகராட்சியாகவும், தமிழகத்தில் 2வது சிறந்த மாநகராட்சியாகவும் தூத்துக்குடி மாநகராட்சி விளங்கி வருகிறது. வழக்கமாக தினமும் 180 டன் குப்பை சேகரிக்கப்படும். மழைக்காலத்தில் சுமார் ஆயிரம் டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டன. தனியாருக்குச் சொந்தமான காலி இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதை மாநகராட்சி மூலம் அகற்ற முடியாது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, வரும் காலங்களில் தனியார் இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு பள்ளமான பகுதிகளை மணல் கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் மாநகர பொறியாளருக்கு வாகனம் வாங்குவது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.