திருச்செந்தூரில் யானை தாக்கி உயிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிதி உதவி - பக்தர்கள் வரவேற்பு

Thiruchendur Murugan

திருச்செந்தூரில் யானை தாக்கி உயிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிதி உதவி - பக்தர்கள் வரவேற்பு

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிழந்த 2 குடும்பத்திற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக நேற்று அறிவித்தார்.இன்று(24.11.2024) அதனை அமைச்சர் சேகர்பாபு வழங்கியுள்ளார். 

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தெய்வானை என்கிற பெண் யானை இருந்து வருகிறது. பக்தர்கள் மற்றும் பாகன்களிடம் அன்பாக பழக கூடியதாகும். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அதன் பாகன்களில் ஒருவரான உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோரை அந்த யானை எதிர்பாராவிதமாக தாக்கியதில் அவர்கள் இருவரும் மரணமடைந்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவ குழு யானையை பல்வேறு வகையில் ஆய்விற்குட்படுத்தியது. ஆய்வில், யானைக்கு எந்த பிரச்னையும் இல்லை, யானை மீது அதிக பிரியம் கொண்ட சிசுபாலன் எடுத்துக் கொண்ட அதிகப்படியான உரிமையின் காரணமாக யானை கோபமடைந்ததும், அதனை தடுக்க முயன்ற உதயகுமாரை யார் என்று தெரியாமல் யானை தாக்கியதும் தெரிய வந்திருக்கிறது. 

சம்பவம் நடைபெற்றதும் அறநிலையத்துறை சார்பில் பாகன் உதயகுமார் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதுமட்டும் போதாது இது ஒரு விபத்து, எனவே உதயகுமார் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி செய்ய வேண்டும் என்று நமது நடுநிலை.காம் -யில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு பேர் இறந்தமைக்கு வருத்தம் தெரிவித்ததுடன், தனது முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து யானை தாக்கி இறந்து போன இரண்டு பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த அமைச்சர் அமைச்சர் சேகர்பாபு, உதயகுமார் மற்றும் சிசுபாலன் குடும்பத்தாரை சந்தித்து தலா ரூ.2 லட்சத்தை வழங்கினார்.

 

தொடர்ந்து கோயிலுக்கு சென்ற அவர், யானை தெய்வானையை பார்வையிட்டார். யானை குறித்து பாகன் ராதாகிருஷ்ணன், உதவி பாகன் செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரித்தார். அப்போது அமைச்சர், யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்தார். அதனை வாங்கி தெய்வானை சாப்பிட்டது. அமைச்சருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். 

நிதிவுதவி அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை பக்தர்கள் வாழ்த்தி, வரவேற்கின்றனர்.