திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது
Thiruchendur Murugan
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது.
திருச்செந்தூர், அக்.22:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.
முருகபெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கபடடு. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்மனுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மன் மற்றும் சிவன், பார்வதி உள்பட பரிவார மூர்த்தி கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு ஆகியோரிடம் காப்பு கட்டிய சோமாஸ் கந்தர் பட்டர் தாம்பூலம் பெற்று யாகசாலை பூஜையை துவங்கியது. யாகசாலையில், விக்னேசுவர பூஜை, புண்ணியாக வாஜனம், பூத சுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. கோயில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன், சண்முக விலாச மண்டபம் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் திருவாடுதுறை ஆதின கந்த சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமியும் அம்மனும் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரம் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
கந்தசஷ்டி திருவிழா முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை கடலில் புனித நீராடி காவி நிற மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து கோயில் கிரி பிரகாரத்தில் அங்க பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். பெரும்பாலான பெண்கள் கிரி பிரகாரத்தில் அடிபிரதட்சணம் செய்தனர். கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து சுவாமியின் பஜனை பாடல்கள் பாடி வந்தனர். போலீஸ் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்களும் செய்து வருகிறார்கள்.
nadunilai.com