திருப்பரங்குன்றம் மலை : காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

Thiruparankundram

திருப்பரங்குன்றம் மலை : காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

மதுரை : 22.12.2025 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக, மலைக்கு செல்லும் பக்தர்களின் செல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்ட அடையாள விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மலைப்பகுதியில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு இருந்தபோதும், நடைமுறையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறி, ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளும், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் காரணமாக, சட்ட ஒழுங்கு பாதிக்கப்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவையொட்டி, நேற்று காவல்துறை பாதுகாப்புடன் கொடியேற்ற நிகழ்வு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்களுக்கும் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி 15-க்கும் மேற்பட்ட ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போது காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான இந்த விவகாரம், மதுரை மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது.