தைப்பூசம் : நாடு முழுவதும் முருக பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Murugan

தைப்பூசம் : நாடு முழுவதும் முருக பக்தர்கள் சிறப்பு வழிபாடு

முருகப்பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் தைப்பூசத் திருநாள் வரும் நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) நாடு முழுவதும் பக்தி உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் இணையும் நாளில் வரும் இந்தத் திருவிழா, முருக பக்தர்களுக்கு மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புராணக் குறிப்புகளின்படி, அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அன்னை பராசக்தி முருகப்பெருமானுக்கு சக்திவேல் வழங்கிய தினமே தைப்பூசம் என நம்பப்படுகிறது. அறிவு, வீரியம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படும் முருகப்பெருமானை இந்த நாளில் வழிபட்டால் மன அமைதி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைப்பூச நாளில் அதிகாலை முதலே கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. பலர் விரதம் இருந்து பால்குடம் ஏந்தியும், கவ்வடி எடுத்தும் முருகனை வழிபடுகின்றனர். சில இடங்களில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக பாதயாத்திரை மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளது.

பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள்

தமிழ்நாட்டில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், சுவாமிமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய முருகன் திருத்தலங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பாதுகாப்பு, குடிநீர், போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொண்டாட்டம்

தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் முருக பக்தர்கள் தைப்பூசத்தை சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடுகின்றனர். குடும்ப நலன், கல்வி, தொழில் வளர்ச்சி மற்றும் மன அமைதிக்காக முருகப்பெருமானை வேண்டி பக்தர்கள் திரளாக கோவில்களில் கூடுகின்றனர்.

தைப்பூசம், பக்தி, தியாகம் மற்றும் ஆன்மீக ஒழுக்கத்தை வலியுறுத்தும் திருநாளாக இந்தாண்டும் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.