நாம் தமிழர் கட்சியினர் சட்டமன்றத்திற்கோ, பாராளுமன்றத்திற்கோ போகப் போறதில்லை - நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா
N.P.Raja
சீமான் கட்சியில் இருந்து ஒருகாலமும் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் உறுப்பினர்கள் போகப் போவதில்லை என நாம் இந்தியர் கட்சியின் மாநில தலைவர் என்.பி.ராஜா கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒரே கொள்கையில் உருவானது. மடமைகள், ஏற்றத்தாழ்வுகளை களைய மக்களிடையே பகுத்தறிவை பெரியார் மேடை ஏறி வளர்த்தார். திராவிடபூமியில், திராவிட அரசியலை முன்னிறுத்தி வெற்றி கண்ட அண்ணா, கருணாநிதி போன்றோர்கள் தலைவர்களாக இருந்த திமுகவை தேர்தல்களில் வீழ்த்த, அவர்களின் கொள்கை வாக்குகளை பிரிப்பதற்கு எதிர் கட்சிகளால் மெருகூட்டப்பட்டதுதான் நாம்தமிழர் கட்சி. கடந்த 2021ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்த பின்பு, திமுக எதிர்ப்பு வாக்குகளை பெற்று வளர்ச்சி அடைய தமிழ்தேசியம் வேறு, திராவிடம் வேறு என்ற பிரச்சாரத்தை முன்நிறுத்தியதால் நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்திக்கிறது.
திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக போல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்நாட்களை அரசியலுக்கும், கொள்கைக்கும் அர்ப்பணித்து மண்ணுலகை விட்டு மறைந்த தலைவர்களை இழிவாக பேசி யூடியூப் லைக்குகள் பெற்று தினமும் ட்ரெண்டிங் கதாநாயகனாக தமிழர்கள் மனதில் இடம் பெற துடிக்கும் சீமானால் ஒரே நாடு, ஒரே தேர்தல், இந்திய மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு, அரசு அதிகாரிகளின் மக்கள் பணி தொய்வு போன்ற மக்களுக்கு தேவையான அரசியலை மழுங்கடிக்க செய்யும் வேலை நடக்கிறது. சீமான் தலைமையில் உள்ள கட்சியில் இருந்து ஒருகாலமும் சட்டமன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் உறுப்பினர்கள் வெற்றி பெற போவதில்லை. தமிழகத்தில் பிற மொழியை தாய் மொழியாக கொண்டு மாநிலங்களின் பிரிவுகள் படி 15 சதவீதத்திற்கு மேலானவர்கள் மூன்று தலைமுறையாக தமிழர்களாக வாழும் தமிழக மக்களை புண்படுத்தும் விதமாக பேசும் தமிழ் தேசிய கொள்கையை தமிழர்கள் ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
nadunilai.com