“அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றுச் சென்றுள்ளனர்” – எஸ்.பி.சண்முகநாதன்
Admk news
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார். தவெக மற்றும் அதில் இணைந்த முன்னாள் அதிமுகவினரை கடுமையாக விமர்சித்து அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
அவர் பேசியதாவது: “பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்ணா விலகி திமுகவை தொடங்கினார். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து விலகி 1972-ல் அதிமுகவை தொடங்கினார். 1977-ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் தற்போது விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சி நடத்துகிறது. மற்றவர்களின் தயவில் நடைபெறும் இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது” என்று சண்முகநாதன் விமர்சித்தார்.
தமிழகத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விஜய்க்கு சுமார் 1.70 கோடி பேர் மட்டுமே வாக்களித்ததாகவும், பெரும்பான்மையான வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை என்றும் கூறினார். மேலும், “இதையெல்லாம் உணராமல் விஜயை பிரதமர் வேட்பாளர் என்று பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிலரை குறிப்பிட்டு பேசிய சண்முகநாதன், “அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் ரூ.20 கோடி, ரூ.30 கோடி பெற்றுக்கொண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு உங்கள் கட்சியில் இணைந்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார். மேலும், தங்களது கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த சிலர் தாங்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை பாதுகாத்துக்கொள்ளவே அங்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
கரூரைச் சேர்ந்த விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி ஊழல் குற்றச்சாட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் பதில் அல்லது ஆதாரம் வெளியாகும் பட்சத்தில் அதையும் செய்தியில் இணைக்க தயார். “இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை வைத்துக்கொண்டு ஊழலற்ற ஆட்சி தருவோம் என்று கூறுவது எப்படி சாத்தியம்?” எனவும் சண்முகநாதன் கேள்வி எழுப்பினார். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு கொள்கை மற்றும் கட்டுப்பாட்டுடன் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றதாக கூறிய விஜய், அங்கு சென்றபின் கார் பந்தயத்தை தொடங்கி வைத்து விட்டு திரிஷாவுடன் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் சண்முகநாதன் விமர்சித்தார். மேலும், விஜய் தற்போது தமிழக முதலமைச்சராக இருப்பதால், திரிஷாவுடனான உறவு குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆண்ட்ருமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் சித. செல்லப்பாண்டியன், அமைப்பு செயலாளர் சின்னச்சாமி, தலைமைக்கழக இளம் பேச்சாளர் கவி உள்ளிட்டோரும் பேசினர்.
“அப்படியானால் அதிமுகவில் இருந்தவர்களும்...?” – பொதுமக்கள் கிண்டல்
இதற்கிடையே, “அதிமுகவில் இருந்து தவெகவில் சென்றவர்கள் கோடிக்கணக்கான பணத்திற்காக சென்றவர்கள்; ஊழல் செய்து பணம் சேர்த்தவர்கள்” என்று சண்முகநாதன் கூறியதை கேட்ட சிலர், “அப்படியானால் அதிமுகவில் இருக்கும் போதும் அவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக அண்ணாச்சி ஒப்புக்கொள்கிறாரா?” என்று அப்பகுதியில் கிண்டலாக பேசப்பட்டது.
சண்முகநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அவரது அரசியல் விமர்சனங்களாகும்; அவை தொடர்பான தனித்தனி சட்டப்பூர்வ நிரூபணங்கள் அல்லது நீதிமன்ற முடிவுகள் இந்த செய்தியில் உறுதிப்படுத்தப்படவில்லை.
nadunilai.com