இந்தியாவிலேயே 3வது சிறந்த மாநகராட்சி விருது பெற்ற தூத்துக்குடி - முதலமைச்சரிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற மேயர்

thoothukudi Mayor N.P.Jegan

இந்தியாவிலேயே 3வது சிறந்த மாநகராட்சி விருது பெற்ற தூத்துக்குடி - முதலமைச்சரிடம் விருதை காண்பித்து வாழ்த்து பெற்ற மேயர்

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து பெற்ற பிறகு பல்வேறு வளர்ச்சி பெற்று வருகிறது. கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் மேயரான ஜெகன் பெரியசாமியின் பணி பாராட்டத்தக்கதுதான். தான் பெற்ற வாய்ப்பை உயரிய கெளரவமாக பார்த்து மக்களிடமிருந்து விலகி இருக்காமல், மக்களோடு மக்களாக கலந்து சரியான கட்டமைப்பை உருவாக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். குடிநீர், சாலை, கழிவு நீர் அகற்றம், தெருவிளக்கு பராமரிப்பு என்று மட்டும் இல்லாமல், மாநகர மக்களின் பல்வேறு நலனிலும் அக்கறை கொண்டவராக திகழ்கிறார்.   

அந்த வகையில் அவரது முயற்சிக்கு கிடைத்த விருதாகத்தான் தற்போது மாநகராட்சிக்கு கிடைத்துள்ள விருதை பார்க்க முடிகிறது. இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வி வழங்குவதில் தூத்துக்குடி மாநகராட்சி 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 27.09.2023 அன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று வாங்கி வந்துள்ளார். 

இன்று(29.09.2023)தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை நேரில் சந்தித்த மேயர் ஜெகன்பெரியசாமி, தாம் பெற்று வந்த விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். 

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் ‌‌எஸ்.சிவராசு உடனிருந்தனர். 

இது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டபோது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி சிறக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் மூலம் இந்தியாவிலேயே கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் நமது தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் சிறப்பான கல்வியினை வழங்கும் மகத்தான பணிக்காக இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 27ம் தேதி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை நேரில் சந்தித்து, விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றேன்.