பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகளை அதிகப்படுத்த வேண்டும்! - தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

Governor tamizhisai soundararajan

பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகளை அதிகப்படுத்த  வேண்டும்! -  தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

அறிவாற்றலை பெற வேண்டியவர்கள் அரிவாலை தூக்கி இருக்கிறார்கள். எனவே, பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகளை  அதிகப்படுத்த வேண்டும் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனையை கொடுக்கிறது. நோட்டு, புத்தகம் என்று இருக்க வேண்டிய மாணவர்கள் வெட்டு, குத்து என்று இருந்திருக்கிறார்கள். அறிவாற்றலை பெற வேண்டியவர்கள் அரிவாலை தூக்கி இருக்கிறார்கள். இதில் தவறு எங்கே நடக்கிறது என ஆழமாக ஆராய வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்?. சாதிய வேற்றுமை குறைய வேண்டும் என நாம் நினைக்கின்ற வேளையில் சாதிய வேற்றுமை மாணவர்கள் அளவில் அவர்கள் உயிரை வாங்குகின்ற அளவில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது. அந்த மாடல் இந்த மாடல் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில மோதல்களை நாம் இங்கு தடுக்க முடியவில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். பிற ஊர்களில் நடப்பதை பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நமது ஊரில் உள்ள மோதல்களை நாம் தடுக்க முடியவில்லை என்பதை ஆட்சியாளர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் மீது மட்டும் நான் பழி சுமத்த விரும்பவில்லை. ஓட்டு அரசியலையும் தாண்டி அனைத்து இயக்கங்கள், பொதுநலன் வாதிகள், ஆசிரியர்கள் என எல்லோரும் கூடி சிந்திக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். இது ஏதோ ஒற்றை சம்பவம், உடன் படிக்கும் சின்னதுரையை சக மாணவர்கள் வெட்டி தங்களது பழியை தீர்த்து இருக்கிறார்கள் என பார்க்க முடியாது. மாணவர்கள் மத்தியில் என்ன ஒரு சூழல் நிலவுகிறது என்பதை அலசி ஆராயவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். சில கண்டனங்களும், சில ஆதரவுகளும் இந்த சூழ்நிலையை மாற்றிவிடப்போவது இல்லை. அன்றைய காலத்தில் பள்ளிகளில் நல்லுறவை மேம்படுத்தும் நல்லொழுக்க வகுப்புகள் இருந்தன. அவை இன்னும் அதிகப்படுத்தப்பட வேண்டும். ஒரு ஊரில் நாங்கள் 50 கும்பத்தினர் இது போன்ற கொடுமைகளினால்  ஊரை காலி செய்திருக்கிறோம் என்ற தகவல் வருகிறது. ஏன் இது போன்ற சம்பவங்களை காவல்துறையினர் தடுக்க தவறி இருக்கிறார்கள். இதுவெல்லாம் மிகப்பெரிய கேள்விகளாக இருக்கிறது. ஆகவே இது போன்ற சூழல் ஏன் நடைபெறுகிறது என அரசியலையும் தாண்டி அனைவரும் சிந்திக்க வேண்டி நிலையில் இருக்கிறோம். 

தமிழில் 40 ஆயிரம் மாணவர்கள் ஃபெயிலாகிறார்கள். 50 ஆயிரம் மாணவர்கள் +2 தமிழ் பரீட்சைகே போகவில்லை. எனவே, தமிழை காப்பாற்றுகிற வேலையை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும். இங்கு இந்தியை யாரும் திணிக்கவில்லை. இந்தி இங்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. ஆகவே இல்லாததை சொல்லிக்கொண்டு, இருக்கிற பெருமையை இழந்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழில் நீட் எழுதலாம். பொறியியல் பாடம்  தமிழில் உள்ளது. எனவே, முதலில் தமிழ் எந்த அளவிற்கு இருக்கிறது, தமிழ் எந்த அளவிற்கு பெருமை கொள்கிறது, 

மாணவர்களிடம் தமிழை எந்த அளவிற்கு எடுத்துச் செல்கிறோம், மாணவர்கள் தமிழில் எந்த அளவிற்கு சிறந்து விளங்குகிறார்கள் என்பதை பாருங்கள். இந்தியை வைத்து 1967ல் இருந்து அரசியல் செய்தாகிவிட்டது. இன்று சிபிஎஸ்சியில் தமிழ் உள்பட 20 மொழிகளில் பாட புத்தகம் வந்துவிட்டது. மத்திய அரசை பொறுத்தமட்டில் மொழி அரசியல் செய்வது இல்லை. இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை பிரதமர் மோடி செந்துள்ளார். உலக அளவில் தமிழை உயர்தியவர் பிரதமர் மோடி ஆகவே, இல்லாததை பேசுவதைவிட்டுவிட்டு இங்கு இருக்கிற பிரச்சினையை பாருங்கள்’’ என்றார்.