தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற கனிமொழி எம்.பி

DMK News

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி தலைவரான அருண்குமாரின் தாயார் ஸ்ரீமதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். இதையடுத்து தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற கனிமொழி எம்.பி, ஸ்ரீமதி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்வில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றியத்தில், தருவைகுளம் அருகேயுள்ள கீழ அரசடி, துப்பாஸ்பட்டி, வெள்ளப்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் 3 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அங்கன்வாடிகளின் தேவையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களையும் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா வழங்கினார். இந்நிகழ்ச்சி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம்–மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் வேல்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அனிட்டன், நிர்வாகிகள் பேச்சிராஜ், ஆலோசனை மாரியான், மிக்கேல், அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி முத்தையாபுரம் எம்டிஏ காலனி பகுதியில், தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ.84.50 லட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள “மகளிர் பூங்கா” எனப்படும் ‘பிங்க்’ பூங்காவை கனிமொழி கருணாநிதி எம்.பி திறந்து வைத்தார். இந்த பூங்காவில் யோகா பயிற்சிக் கூடம், ஸும்பா பயிற்சி, சிலம்பம், இறகுப்பந்து மைதானம், டென்னிஸ் மைதானம், குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய கனிமொழி எம்.பி, பெண்களுக்கான பாதுகாப்பான, சுதந்திரமான உடற்பயிற்சி சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த ‘பிங்க்’ பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெண்கள் தங்களது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்தப் பூங்கா பெண்கள் மனத் தடைகளை தாண்டி ஆரோக்கிய வாழ்க்கை முறையை மேற்கொள்ள உதவுவதாக கூறினார்.

மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு, போக்குவரத்து, கழிவறை வசதி, கல்வி, பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டிய கனிமொழி எம்.பி, பெண்களுக்காக முக்கியத்துவம் தரும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இதுபோன்ற பிங்க் பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் மேலும் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.