மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்க உழைக்க வேண்டும் - இளைஞரணிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

DMK News

மு.க.ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்க உழைக்க வேண்டும் - இளைஞரணிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அட்வைஸ்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம்–மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை, மாவட்ட திமுக அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது அவர் கலந்துரையாடலின் போது, திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தலைமை அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு, கட்சியின் கொள்கைகளையும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துச் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை கழக தலைவர் நிர்ணயித்துள்ளதாக தெரிவித்த அவர், அந்த இலக்கை அடைவதற்கு இளைஞர் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் வலுவான களப்பணியாற்ற வேண்டும் என்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்ததை நினைவுகூர்ந்த அமைச்சர், அதேபோன்று வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியைப் பெற கட்சித் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.