தூத்துக்குடி, டிசம்பர் 30:
பாதுகாப்பான கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை மனித உரிமை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், ரூசக் தொண்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம், தூத்துக்குடி ராஜ் ஹோட்டலில் (Hotel Raj) டிசம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் சரோஜா, மாநகராட்சி மருத்துவ அதிகாரி டாக்டர் வினோஜினி, மாவட்ட குடும்ப நலத்துறை இயக்குனர் டாக்டர் பொன் ரவி, தூத்துக்குடி மாவட்ட அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ஞானஜெயந்தி, செவிலியர் கல்லூரி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், ஒட்டப்பிடாரம் பகுதி கவுன்சிலர் முத்துமாரி, அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், முன்களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் என மொத்தம் 67 பேர் கலந்து கொண்டனர்.
கருக்கலைப்பு – மனித மாண்புடன் தொடர்புடையது
கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை ரூசக் ‘கலை டாஸ்கோப்’ திட்ட அதிகாரி டாக்டர் பவானி வரவேற்றுப் பேசினார்.
RUWSEC அமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னோடியாக இருந்த மனித உரிமை வழக்கறிஞர் D.J. ரவீந்திரன் சிறப்புரை வழங்கி,
“கருக்கலைப்பு என்பது ஒரு மருத்துவ சேவை மட்டுமல்ல; அது பெண்களின் உடல் சுயாட்சி மற்றும் மனித மாண்புடன் நேரடியாக தொடர்புடைய உரிமை” எனக் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் கருக்கலைப்பு நிலவரம்
இதனைத் தொடர்ந்து ரூசக் நிறுவனரான T.K. சுந்தரி ரவீந்திரன், தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள், மகப்பேறு மரணங்கள் மற்றும் சட்டப்படி கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
‘கலை டாஸ்கோப்’ திட்டத்தின் நோக்கம்
ரூசக் செயல்தலைவர் பாலசுப்ரமணியம், ‘கலை டாஸ்கோப்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், தொலைநோக்கு பார்வை மற்றும் முக்கிய செயல்திட்டங்களை விளக்கினார்.
அரசு ஆரம்ப சுகாதார மையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை, அனைத்து நிலையங்களிலும் பாதுகாப்பான கருக்கலைப்பு சேவைகள் எளிதில் கிடைக்க வேண்டிய அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார்.
இளம் வயது திருமணம், பாலியல் கல்வி அவசியம்
கலந்துரையாடலில், இளம் வயது திருமணம் குறித்த விழிப்புணர்வு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், கருக்கலைப்பு சேவை இளம் வயதுப் பெண்களுக்கு மட்டுமல்லாமல், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் அடிப்படை சுகாதார சேவையாகும் எனவும், இதற்கு உரிய கவனம் செலுத்தினால் மகப்பேறு மரண விகிதத்தை குறைக்க முடியும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
தவறான நம்பிக்கைகள் களைய வேண்டும்
கருக்கலைப்பு தொடர்பாக மக்களிடையே நிலவும் தவறான கருத்துகள், அச்சங்கள் மற்றும் சமூகக் கண்ணோட்டங்களை நீக்குவதற்கான தொடர்ச்சியான விழிப்புணர்வு பணிகள் அவசியம் என கூட்டத்தில் ஒருமித்த கருத்து வெளிப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற துளசி டிரஸ்ட், எம்.எம்.எஸ்.டி டிரஸ்ட், PAD நிறுவனம், மேலும் ரூசக் சகோதரிகள் ராதா மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில், ரேவதி நன்றியுரை வழங்க, கூட்டம் இனிதே நிறைவடைந்தது.