பல்நோக்கு மருத்துவமனையை மகப்பேறு மருத்துவமனையாக்குவதா? - தமிழக அரசுக்கு பாஜக எதிர்ப்பு
Bjp news
தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை மகப்பேறு மருத்துவமனையாக மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றப் போவதாக தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட நாள் கனவான 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்காக நாட்டின் உள்கட்டமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், கப்பல் கட்டும் தளம், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் போன்ற பல்வேறு திட்டங்களை அவர் அளித்துள்ளார்.
அதுமட்டுமன்றி பல்நோக்கு மருத்துவமனை மூலம் இதய அறுவைசிக்சை, புற்றுநோய், சிறுநீரகப்பிரச்சனை, நரம்பியல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், அதிநவின மருத்துவ வசதி பெறவும், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.136.35 கோடி வரை நிதி பங்களிப்பு அளித்துள்ளது. மருத்துவமனைத் திட்டம் தொடங்கப்பட்டு, 95 சதவீகிதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த பல்நோக்கு மருத்துவமனையை, "மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை" என்று மாற்றுவதாக தமிழக திமுக அரசு தூத்துக்குடி மக்களுக்கு எதிராக திடீரென ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இது தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். மக்கள் நலனில் அக்கறையற்ற, உள்நோக்கம் கொண்ட ஒரு செயல். ஒரு திட்ட பணிகள் 95 சதவீகிதம் நிறைவடைந்த பிறகு, மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புக்கு மாறாக, அதன் நோக்கத்தை மாற்றுவது என்பது தூத்துக்குடி மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கக்கூடியது. இது கண்டனத்திற்கு உரிய செயலாகும். இந்த திடீர் அறிவிப்பு, தூத்துக்குடி மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திராவிட மாடல் அரசின் இந்த துரோகச் செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கின்றேன். திமுக அரசின் இந்த முடிவானது, மக்களின் அடிப்படைத் தேவையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, தனியார் மருத்துவ நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான செயலாகத்தான் தெரிகிறது. பல்நோக்கு மருத்துவமனைத் திட்டத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு அதிகம் இருப்பதால், இதன் வெற்றி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு நற்பெயர் ஈட்டித் தந்துவிடுமோ என்று வழக்கம்போல் மத்தியஅரசின் பல்வேறு திட்டங்களை புறக்கணித்த திமுக அரசு, இந்த உயிர்காக்கும் பல்நோக்கு மருத்துவ மனை திட்டத்தையும் ஈவுஇரக்கம் இல்லாமல் புறக்கணிக்கின்றது.
டயாலிசிஸ், இருதய அறுவைசிகிச்சை, புற்றுநோய் ,போன்ற நோய்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் பல லட்சரூபாய் வரை செலவழித்து வருகிறார்கள். உயர்சிகிச்சை பெறமுடியாமல் பலஉயிர்களும் பறிபோய் இருக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு பல்நோக்கு மருத்துவமனையை கொண்டு வந்துள்ளார். ஆனால் திமுக அரசு மத்திய அரசின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மக்களின் உயிரை பணையம் வைத்து விளையாடி கொண்டிருக்கிறது.
இந்த அரசாணையைத் உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கடுமையான சட்டப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
nadunilai.com