தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9-வது சித்த மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாட்டம்

medical news

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 9-வது சித்த மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாட்டம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் 9-வது சித்த மருத்துவ தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் முக்கியத்துவம், அவற்றின் வாழ்வியல் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சித்த மருத்துவ தினத்தின் சிறப்புகள் குறித்து சித்த மருத்துவ அலுவலர் லதா பேசுகையில், “சித்த மருத்துவம் என்பது நோய்களை மட்டுமல்ல, நோய் வராமல் தடுக்கும் வாழ்க்கை முறையையும் வலியுறுத்தும் மருத்துவ முறை. உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றின் சமநிலையே ஆரோக்கியத்தின் அடிப்படை என சித்தர்கள் கூறியுள்ளனர். மூலிகைகள், தாதுக்கள் மற்றும் இயற்கை சார்ந்த மருந்துகள் மூலம் பக்கவிளைவுகள் குறைவாக சிகிச்சை அளிக்கப்படுகிறது” என விளக்கினார்.

தொடர்ந்து ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் பேசுகையில், “ஆயுர்வேதம் என்பது மனித வாழ்வியலை முழுமையாக வழிநடத்தும் மருத்துவ அறிவியல். தினசரி ஒழுக்கம், உணவுப் பழக்கம், பருவகால வாழ்க்கை முறை, மனநலம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்ததே ஆயுர்வேத மருத்துவம். உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களின் சமநிலையே நல்ல ஆரோக்கியத்துக்கு அடிப்படையாகும்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருந்தாளுநர்கள் சுப்புலட்சுமி, சுமித்ரா, சாந்தி, மருத்துவ பணியாளர் சுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் மனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பங்கேற்ற அனைவருக்கும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டு, பாரம்பரிய மருத்துவ முறைகளை அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.