போகி பண்டிகையை முன்னிட்டு கழிவு பொருட்களை தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படையுங்கள் - மேயர் வலியுறுத்தல்
N.P.Jegan News
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்டேட் பாங்க் காலணியில் அமைந்துள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார்.
இந்த முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், ஒவ்வொரு மண்டலமாக குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, கட்டிட அனுமதி உள்ளிட்ட பணிகளுக்காக 876 மனுக்கள் பெறப்பட்டதில் 868 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், 8 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என அவர் கூறினார். மேலும், மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் வந்து மனு அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாநகராட்சி இணையதளம் மூலம் புகார்கள் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களின் இல்லத்திற்கே நேரில் சென்று குறைகளை சரிசெய்வார்கள் என்றும் விளக்கினார்.
மேலும் அவர், “குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கழிவுநீர் வாய்க்கால்களில் போட்டால் அதில் அடைப்பு ஏற்படும். அதன் மூலம் கொசுத் தொல்லை, சுகாதாரக் கேடுகள் மற்றும் தொற்றுநோய்கள் உருவாகும். எனவே குப்பைகளை கழிவுநீர் வாய்க்கால்களில் போட வேண்டாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். மாநகரை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தமிழர் திருநாளான தை பொங்கலை முன்னிட்டு, பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றும் வழக்கத்தின் அடிப்படையிலேயே போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் பழைய பொருட்கள் மற்றும் கழிவுகளை புகை ஏற்படும் வகையில் தீயிட்டு கொளுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபாடு, காற்று மாசு மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை தவிர்க்கும் நோக்கில், “புகையில்லா போகி பண்டிகை” கொண்டாட வேண்டும். போகி பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 10, 11 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் மாநகரம் முழுவதும் மாஸ் கிளீனிங் பணிகள் நடைபெறும் என்றும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை எரிக்காமல், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தை பொங்கலை முன்னிட்டு, மாநகராட்சி மைய அலுவலகத்தில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட உள்ளதாகவும், இந்தாண்டு அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்படும் என்றும் மேயர் தெரிவித்தார்.
மேலும், பொங்கல் விடுமுறைக்கு முன்பாக அனைத்து பூங்காக்களும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், வடக்கு மண்டலத்தில் தனசேகரன் நகரில் உள்ள பூங்கா மற்றும் பிங் பார்க் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறினார். எழில் நகரில் புதிய பூங்கா பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று உடற்பயிற்சி கூடங்களுடன் கூடிய சிறிய பூங்காக்கள் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தருவைகுளம் குப்பை கிடங்கில் தொடங்கப்பட்ட மரக்கன்று நடும் பணிகள் தற்போது ஒரு லட்சம் மரங்களை தாண்டி குறுங்காடுகளாக உருவெடுத்துள்ளதாகவும், மாநகராட்சி சார்பில் இதுவரை 20 குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் மேயர் கூறினார். பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
nadunilai.com