தீபத்தூண் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி சர்ச்சை பேச்சு - பாஜ, இந்து அமைப்புகள் கண்டனம்.

Thiruparankundram

தீபத்தூண் விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி சர்ச்சை பேச்சு - பாஜ, இந்து அமைப்புகள் கண்டனம்.

திருப்பரங்குன்றம் மலைக்கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பை எதிர்த்து கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக தவறாக நடந்து கொண்டது. அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என மத்திய அமைச்சர் பியூஸ்கோயலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மதுரை உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலைக்கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, அந்த தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது எனக் கூறினார். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் அறநிலையத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பு முழுக்க முழுக்க சட்டத்திற்கு முரணானது என்றும், தீபத்தூண் என்ற அந்த தூணில் கடந்த 100 ஆண்டுகளில் எப்போதும் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார். காமராசர், ராஜாஜி, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல முதல்வர்களின் ஆட்சிக் காலத்திலும் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்கூட தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற நிலையில், இல்லாத ஒரு பழக்க வழக்கத்தை புகுத்த முயற்சிப்பதாகவும், அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.சுடுகாட்டுப் பிணம் குறித்த ஒப்பீட்டில்,“உடலை எரிக்க வேண்டுமென்றால் சுடுகாட்டில்தான் எரிக்க வேண்டும். வேறொரு இடத்தில் எரிக்க முடியுமா? அதுபோல எந்த இடத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்ய வேண்டும். பழக்க வழக்கங்களை மாற்றக் கூடாது” என அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த தீர்ப்பின் காரணமாக அமைதியான சூழல் பாதிக்கப்படலாம் என்பதால்தான் அந்த நாளில் காவல்துறை 144 தடை உத்தரவு விதித்ததாகவும், காவல்துறை தடுக்கவில்லை என்றால் இதுவரை இல்லாத நடைமுறை உருவாகியிருக்கும் என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பாஜக மதக் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அரசியல் உள்நோக்கத்தில் செயல்படுவதாகவும் அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம் மலையின் அருகே தர்கா இருப்பதால் சர்வே கல் ஊன்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். 

அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தனது கண்டன உரையில்,“மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் திமுகவினர் நடந்து கொள்கின்றனர். இதற்கான தக்க பதிலை வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுகவிற்கு வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தற்போது சட்ட, அரசியல் மற்றும் மத ரீதியாக தீவிரமடைந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேற்கொள்ள உள்ள மேல்முறையீடு மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகும் அரசியல் நிலவரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.