திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் – பட்டியலுடன் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

ADMK NEWS

திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் – பட்டியலுடன் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி

2021 ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்துவரும் காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் விவரங்களைத் துறை வாரியாகத் தொகுத்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநரை சந்தித்து புகார் பட்டியலை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக அரசின் ஊழல் நிறைந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முழுமையான ஆதாரங்களுடன் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். திமுக அரசு செய்ததாகக் கூறப்படும் அனைத்து ஊழல்களுக்கும் போதிய ஆவணங்கள் இருப்பதால், உயர் நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும், திமுக அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல அதிகார வர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், இதன் விளைவாக கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டு தமிழ்நாடு பெரும் கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கடந்த 56 மாதங்களில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மொத்தமாக சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உயர்ந்துள்ளதாகவும், இது நிர்வாகத் திறனின்மையின் வெளிப்பாடு என்றும் விமர்சித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான ஊழல் தொடர்பான ஆடியோ வெளியானதாகவும், அந்த தொகையை சப்ரீசன் மற்றும் உதயநிதி கணக்கிட்டதாக அப்போதைய நிதி அமைச்சரே கூறியதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். “ஊழல் செய்வதைத் தவிர திமுக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் கட்சியாக திமுக உள்ளது” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் நடைபெற்றதாக அதிமுக தரப்பில் கூறப்படும் துறை வாரியான ஊழல் தொகை விவரங்களையும் அவர் வெளியிட்டார். 

மேலும், திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும், தொழில் முதலீடுகள் தமிழகத்தை விட்டு அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக்கணினி திட்டம் தாமதமாக செயல்படுத்தப்பட்டதால் பயன் இல்லாததாக மாறியுள்ளதாகவும், அந்த நிதியை நேரடியாக மாணவர் கல்விக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை என்றும், தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவது திமுக அரசின் தோல்வியை காட்டுவதாகவும் கூறினார். “தமிழகம் இன்று ஒரு போராட்ட களமாக மாறியுள்ளது. வருங்கால சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக அரசு மீது அளிக்கப்பட்டுள்ள இந்த புகார் அறிக்கைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் உரிய விசாரணை நடைபெற வேண்டும் என்றும், ஊழல்களுக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.