திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் - மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி
Thiruparankundram
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எந்த விதமான தடையும் இல்லை என்றும், ஏற்கனவே நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய உத்தரவு முழுமையாக செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையே கடந்த சில காலமாக மோதல் நீடித்து வந்தது. மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை நிராகரித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் நீதிமன்றங்களில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த அனைத்து மனுக்களையும் ஒருங்கிணைத்து விசாரித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளது. தீபம் ஏற்றும் நிகழ்வின்போது பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும் என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் நேரடியாக மேற்பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், “தீபம் ஏற்ற அனுமதித்தால் சட்ட ஒழுங்கு சீர்குலையும்” என அரசு அதிகாரிகள் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்கள் கற்பனையானவை என்றும், ஒரு சமூகத்தின் மீது மற்றொரு சமூகம் அவநம்பிக்கை கொள்ளும் வகையில் அரசு அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வகை அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள இடம் எல்லைக்கல் அல்லது சமணர்களுக்குச் சொந்தமானது என்ற வாதங்களையும் நீதிமன்றம் நிராகரித்தது. கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தேவஸ்தானமே ஏற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீண்டநாள் சர்ச்சைக்கு முக்கியமான தீர்வாக கருதப்படுகிறது. அரசு அதிகாரிகளின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்துள்ள இந்த உத்தரவு, கார்த்திகை தீப விழாவை பாரம்பரிய முறையில் நடத்துவதற்கு வழி வகுத்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
nadunilai.com