காந்தி மண்டபத்தில் மது பாட்டில்களா? - வருத்தம் தெரிவிக்க வேண்டும் பராமரிக்கும் துறை அமைச்சர்
Gandhi News

தன் வாழ்நாள் முழுவதும் கொண்ட கொள்கையில் நிலைத்திருந்தவர் அண்ணல் காந்தியடிகள். மதுவுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களே இப்போதும் அவர் பிறந்த குஜராத்தில் மதுவிலக்கு உள்ளது. அப்படிப்பட்டவரின் மணி மண்டபத்தில் மதுபாட்டில்கள் கிடக்கிறது என்றால் அதனை பராமரிக்கும் அரசு நிர்வாகம் வெட்கப்பட வேண்டும்தானே?.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சென்னை காந்தி மண்டபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தூய்மை பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடந்தது வருத்தம் அளிக்கிறது என்று வேதனைப்பட்டார். இந்த தகவல் நாட்டு மக்களை ஆச்சர்யபட வைத்தது. மக்களிடையே இது குறித்த விவாதம் நடந்து வரும் வேளையில், தமிழக அமைச்சர் ரகுபதி கவர்னரை விமர்சித்து பேட்டியளித்துள்ளார். கவர்னர் ரவி தனது பதவியை மறந்துவிட்டு அரசியல்வாதியை போல் செயல்படுகிறார். மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை துண்டிக்கும் வகையில் செயல்படுவதுடன் கவர்னர் மாளிகையை அரசியல் பவனாக மாற்றுகிறார்.
தமிழகத்தில் பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு போட்டியாக உள்ள ஒரே இடம் கவர்னர் மாளிகைதான். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பிஆர்ஓ போலவும் செயல்படுகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த கவர்னருக்கும், கேமராமேன் கண்களுக்கும் மதுபாட்டில் தெரிந்துள்ளது. அதிகம் குப்பை சேரக் கூடிய மெரினா கடற்கரையை கூட தூய்மையாக வைத்துள்ளோம். சுத்தம் செய்யும் பணிகளை சென்னை மாநகராட்சி சிறப்பாக செய்து வருகிறது.
மதுவை தமிழக அரசால் மட்டும் ஒழித்துவிட முடியாது. இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் முடியாது. எல்லா மாநிலங்களும் மது ஒழிப்பை கொண்டு வந்தால் தமிழகத்திலும் கொண்டு வருவோம். மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான அரசு திமுக.,அரசு தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமர்படுத்த முடியாத காரியம். அமல்படுத்துவது மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
காந்தி மண்டபத்தில் மது பாட்டில் கிடந்தது என்கிற தகவல் அமைச்சருக்கு மன கஷ்டத்தை கொடுத்திருக்க வேண்டும். மாறாக கவர்னரை விமர்சனம் செய்கிறார். அதுபோல் மாநில கொள்கைக்குட்பட்ட மது கொள்கையை மத்திய அரசுதான் நிறைவேற்ற வேண்டும் என்று அடம்பிடிப்பதை பார்த்தால் அமைச்சருக்கு அதெல்லாம் தெரியுமா அல்லது தெரியாதா என்பது தெரியவில்லை. அதெற்கெல்லாம் முன்பாக காந்தி மண்டபத்தில் மதுபாட்டில் கிடந்தது என்கிற தகவலுக்காக இவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். அதுதான் சரியான நடவடிக்கையாகும். அதைவிட்டுவிட்டு ஏதேதோ பேசி சமாளிப்பது அமைச்சர் பொறுப்பிற்கு அழகில்லை என்கின்றனர் பொதுமக்கள்.