குலசை முத்தாரம்மன் கோயில் தசரா பெருந்திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

kulasai

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா பெருந்திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயில் தசரா பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். 

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ.முத்தாரம்மன் கோயில் தசரா  பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயிலில் விமர்சையாக ஆண்டுதோறும் நடக்கிறது. நவராத்திரி விழாவே, தசரா திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  இத்தகைய முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் இன்று  துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 5.00 கோவில் நடை திறக்கப்பட்டு,  காலை 6.30 மணிக்கு யானை மீது கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது. அதனைத் தொடர்ந்து முத்தாரம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.  தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது தொடர்ந்து காலை 10:32 மணிக்கு  உள் பிரகாரத்தில் உள்ள  செப்பு கொடிமரத்தில் மேளதாளம் முழங்க குமார் பட்டர் கொடியேற்றினார். அப்போது அங்கு திரண்டு இருந்த  பக்தர்கள் "ஓம் காளி, ஜெய் காளி" என கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு, பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான  அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.  கொடியேற்றத்தை முன்னிட்டு மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது.  இத்திருவிழா வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு நான்கு காலம் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடக்கிறது.   இரவு முத்தாரம்மன் பல்வேறு கோலத்தில் எழுத்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிஷாசம்காரம் 12ம் தேதி நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடக்கிறது. தசரா திருவிழா துவங்கியதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாடை பக்தர்கள் குழுக்களாக குவிந்தனர். இதனால் குலசை நகரமே போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. திருவிழா முன்னிட்டு 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள்,  மண்டல இணை ஆணையர் அன்புமணி, நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.