காயல்பட்டினம் நகரத்துக்குள் அனைத்து அரசு பேருந்துகளும் சென்று வரவேண்டும் - எம்.டி அதிரடி உத்தரவு

TNSTC NEWS

காயல்பட்டினம் நகரத்துக்குள் அனைத்து அரசு பேருந்துகளும் சென்று வரவேண்டும் - எம்.டி அதிரடி உத்தரவு

தூத்துக்குடியில் இருந்து ஸ்பிக்நகர், முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி  வழியாக திருச்செந்தூர் உள்ளிட்ட தென்பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அவைகள் ஆறுமுகநேரியில் இருந்து காயல்பட்டினம் மற்றும் அடைக்கலாபுரம் என இரண்டு விதமான வழித்தடங்களில் பிரிந்து செல்கிறது. அந்த வகையில் காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய அரசு பேருந்துகள் சில காயல்பட்டினம் வழியாக செல்ல வில்லை என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன. மேலும் அப்பேருந்துகளை முறையாக காயல்பட்டினம் வழியாக இயக்க வேண்டும் என்று காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

கோரிக்கையை ஏற்றுக் கொண்ட திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநர் கே.தசரதன், காயல்பட்டினம் வழியாக செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் காயல்பட்டினம் நகரத்துக்குள் இயக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் காயல்பட்டினம் வழியாக செல்லக்கூடிய அனைத்து அரசு பேருந்துகளும், அனைத்து நேரங்களிலும் காயல்பட்டினம் நகர் வழியாக இயக்குவதற்கு திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியக்கூடிய பறக்கும் படை சேர்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. எனவே காயல்பட்டினம் நகர பொதுமக்கள் அனைவருக்கும் தங்கு தடை இன்றி சீரான பேருந்து சேவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.