தூத்துக்குடியில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை
Police News
சமீப காலமாக காவல்துறைக்கு போதாத காலம் என்றே சொல்ல வேண்டும். பிரச்னைகள் காவல்துறையை சுற்றியே பார்க்க முடிகிறது. தூத்துக்குடியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் காவல்நிலையம் முன்பாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பிரச்னையாகி கிடக்கிறது.
தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற சுவிசேஷராஜ் (42). இவர் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் தங்கக்கட்டி என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். விஷேச காலங்கள் மொத்த ஆர்டர் எடுத்து பிரியாணி சப்ளை செய்வது, தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளின் பூத்துகளுக்கு பிரியாணி சப்ளை செய்வது என பிரபலமாக பேசப்பட்ட கடை அது. அதன் கிளைகள் டூவிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மற்றும் ஸ்பிக் நகரில் இரண்டு இடங்களில் என குறுகிய காலங்களில் விரிவடைந்தது. கார், வீடு என உச்சத்தில் இருந்த சுவிசேஷராஜ்யின் தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதாம். சமீபகாலமாக தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் உள்ள லெவிஞ்சிபுரத்தில் மட்டும் பிரியாணி கடை நடத்தி வந்திருக்கிறார்.
இந்தநிலையில் அவரது உறவினரிடையே ஏற்பட்ட தகராறு அடிதடி வரை சென்றிருக்கிறது. அடிதடி குறித்து மனைவியின் தங்கையின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கடந்த 4 ம் தேதி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருகிறார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் புகாரில் குறிப்பிட்ட நபர்களை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சுவிசேஷராஜ் முத்தையாபுரம் காவல் நிலையம் சென்று தனது உறவினர் தனது பைக் மற்றும் செல்போனை உடைத்து விட்டதாக கூறி அதற்காகவும் புதிதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். காலையில் வரும்படி போலீசார் கூறியதாக தெரிகிறது. அதனை ஏற்றுக் கொள்ளாத சுவிசேஷராஜ் காவல் நிலையம் முன்பாக திருச்செந்தூர் சாலையில் நின்று திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ குளித்துள்ளார். பின்னர் காயம் ஏற்பட்டதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். உடனடயாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் தீயை அணைத்ததுடன் அவரை ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
புகார் கொடுக்க வந்தவர் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாருக்கு மேலும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
nadunilai.com