தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் சிறப்பு முகாம்களில் 23,256 படிவங்கள் பெறப்பட்டது - மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தகவல்

Thoothukudi collector

தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் சிறப்பு முகாம்களில் 23,256 படிவங்கள் பெறப்பட்டது - மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் தொடர்ச்சியாக, கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்களில் மொத்தம் 23,256 படிவங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

19.12.2025 முதல் 18.01.2026 வரை உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அமைவிட அலுவலர்கள் மூலம் தகுதியுடைய வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (03.01.2026) விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களில் 10.9 சதவீதம், அதாவது 1,61,000 வாக்காளர்கள் இடம்பெயர்வு, மரணம், இரட்டைப் பதிவு, முகவரியில் இல்லாமை போன்ற காரணங்களால் A.S.D (Absent, Shifted, Dead) பட்டியலில் சேர்க்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நீக்கம் செய்யப்பட்டவர்களையும், புதிய தகுதியுடைய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் நடைபெற்ற முகாம்களில்,
 படிவம்–6 (புதிய சேர்ப்பு / மீண்டும் சேர்ப்பு) : 16,312
படிவம்–7 (நீக்குதல்) : 161
படிவம்–8 (முகவரி மாற்றம் / திருத்தம்) : 6,770
என மொத்தம் 23,256 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இன்றும் மற்றும் நாளையும் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும், வாக்காளர்கள் படிவம்–6, 7, 8 ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார். பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆவண சரிபார்ப்புக்குப் பின் தகுதி உள்ளவை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என அவர் கூறினார்.

இன்று பார்வையிடப்பட்ட வாக்குச்சாவடிகள்:

விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட சோழபுரம், எத்திலப்பநாயக்கன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கீழஈரால், எட்டயபுரம், இலுப்பையுரணி, லாயல் மில் காலனி, பாண்டவர்மங்கலம், இடைசெவல், கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா, கயத்தார் வாக்காளர் பதிவு அலுவலர் பென்னட் ஆசீர், வட்டாட்சியர்கள் சுபா (எட்டையபுரம்), பாலசுப்பிரமணியம் (கோவில்பட்டி), அப்பணராஜ் (கயத்தாறு) ஆகியோர் உடன் இருந்தனர்.